தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி 5.20 சதவீதமாக உயர்வு
புதுடில்லி: நாட்டின் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த மே மாதத்தில் 5.20 சதவீதமாக, மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக, மத்திய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.கடந்த ஏப்ரல் மாதத்தில், தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி 4.50 சதவீதமாக இருந்த நிலையில், மே மாதத்தில் 5.20 சதவீதமாக உயர்ந்துள்ளது. தயாரிப்பு துறை மற்றும் சுரங்கத் துறை ஆகியவற்றின் செயல்பாடுகள் சிறப்பாக இருந்த காரணத்தால், இந்த வளர்ச்சி எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஆண்டு மே மாதத்தில் 19.70 சதவீதமாக இருந்தது.இதற்கு காரணம், கொரோனா தாக்கம் காரணமாக, இதற்கு முந்தைய ஆண்டில் உற்பத்தி மிக குறைவாக இருந்ததால், ஒப்பீட்டளவில் இந்த வளர்ச்சி அதிகமாக காணப்பட்டது. இதேபோல், தயாரிப்பு துறை வளர்ச்சியும், கடந்த ஆண்டு மே மாதத்தில் 20.70 சதவீதமாக இருந்தது. தற்போது நடப்பாண்டு மே மாதத்தில், இது 5.70 சதவீதமாக உள்ளது. மின்சார உற்பத்தியை பொறுத்தவரை, மதிப்பீட்டு மாதத்தில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 0.90 சதவீதமாக அதிகரித்துள்ளது. சுரங்கத்துறை வளர்ச்சி 6.40 சதவீதமாக உள்ளது. வீட்டு உபயோக சாதனங்கள் உற்பத்தி 1.10 சதவீதம் உயர்ந்துள்ளது.