உள்ளூர் செய்திகள்

இந்திய பட்டயக் கணக்காளர்கள் சங்கத்தின் 57வது மாநாடு

சென்னை: இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் (ஐசிஏஐ) தென்னிந்திய மண்டல கவுன்சிலின் (எஸ்ஐஆர்சி) 57வது மண்டல மாநாடு, 'ஆக்கம்: மேலும் உயர்வை நோக்கிய முன்னேற்றம்' என்ற தலைப்பில் இன்று மற்றும் நாளை சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.இந்த மாநாட்டில் உலகளாவிய கணக்கியல் தலைவர்கள், தலைமை நிதி அதிகாரிகள், மூத்த வழக்கறிஞர்கள் உள்ளிட்ட 3,500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்கிறார்கள். நாட்டில் தற்போது சுமார் 4 லட்சம் பட்டயக் கணக்காளர்கள் உள்ள நிலையில், 2050 ஆம் ஆண்டளவில் 50 லட்சம் பேருக்குத் தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.மாநாட்டை தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் தொடங்கிவைக்கிறார். சர்வதேச பட்டயக் கணக்காளர்கள் கூட்டமைப்பின் (ஐஎப்ஏசி) துணைத் தலைவர் டேரின் ரூல்டன் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். மேலும் ஐசிஏஐ தலைவர் சரண்ஜோத் சிங் நந்தா, துணைத் தலைவர் பிரசன்ன குமார் டி உள்ளிட்டோர் உரையாற்றுகிறார்கள்.நாளை தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், “உலகமயமாக்கல், தடையில்லா வர்த்தகம் மற்றும் கட்டணங்கள் - கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம்” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றுகிறார்.இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில், வருமான வரி மசோதா 2025, ஜிஎஸ்டி @ 8, சைபர் பாதுகாப்பு, டிஜிட்டல் மாற்றம், பணமோசடி தடுப்பு சட்டம் உள்ளிட்ட 14 தொழில்நுட்ப அமர்வுகள் நடைபெறுகின்றன. மேலும், இந்தியாவின் முன்னணி ஆலோசனை நிறுவனங்கள் மற்றும் நிதித்துறையின் டிஜிட்டல் மாற்றம் குறித்து குழு விவாதங்களும் நடைபெறுகின்றன.குறிப்பாக, இந்த மாநாடு 17 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு சென்னைில் நடைபெறுவதும், தமிழ்நாட்டைச் சேர்ந்த ரேவதி எஸ். ரகுநாதன் எஸ்ஐஆர்சி தலைவராக வழிநடத்துவதும் சிறப்பு. மாநாட்டை முன்னிட்டு நடத்தப்பட்ட மாநிலங்களுக்கு இடையேயான எஸ்ஐஆர்சி பிரீமியர் லீக் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்