புதுச்சேரியில் கொத்தனார் பிள்ளைகள் சாதனை
புதுச்சேரி: புதுச்சேரியில் அரசுப் பள்ளி அளவில், கொத்தனார்களின் பிள்ளைகள், பிளஸ் 2 பொதுத்தேர்வில், முதல் மூன்று இடங்களை பெற்று சாதனை படைத்துள்ளனர். பிளஸ் 2 பொதுத்தேர்வில், அரசுப் பள்ளிகளில் புதுச்சேரி அளவில் வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் உதயசந்தர் 1,154 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், ஏம்பலம் மறைமலையடிகள் மேல்நிலைப் பள்ளி மாணவர் சதீஷ்குமார் 1,138 மதிப்பெண்களுடன் 2ம் இடத்தையும், முதலியார்பேட்டை அன்னை சிவகாமி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி நித்யா 1,133 மதிப்பெண்களுடன் 3ம் இடத்தையும் பிடித்துள்ளனர். ஆலங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த மாணவர் உதயசந்தர் தமிழ் - 190, ஆங்கிலம் -181, கணிதம்- 196, இயற்பியல் - 198, வேதியியல் -199, உயிரியல்- 190 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவரது தந்தை வரதராசு கொத்தனார். தாய் வசந்தி இல்லத்தரசி. மாணவர் உதயசந்தர் கூறுகையில், "அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என திட்டமிட்டு படித்தேன். பிளஸ் 2 சேர்ந்தபோதே, வீட்டில் கேபிள் டிவி இணைப்பைத் துண்டித்து விட்டனர். மேலும், சினிமா உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களைத் தவிர்த்தேன். மொழிப் பாடங்களைத் தவிர மற்ற பாடங்களுக்கு தனியாக டியூஷன் படித்தேன். மருத்துவம் பயின்று, கிராமப்புறத்தில் பணிபுரிய விரும்புகிறேன்" என்றார். ராசாப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சதீஷ்குமாரின் தந்தை நாராயணசாமி கொத்தனார். தாய் காந்திமதி விவசாய கூலித் தொழிலாளி. சதீஷ்குமார் கூறும்போது, "பிளஸ் 2 படிப்பின்போது, டிவி பார்ப்பது உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களைத் தவிர்த்து விட்டேன். விடுமுறை நாட்களிலும் பள்ளியில்தான் நேரத்தைச் செலவிடுவேன். மேலும், பள்ளியில் ஞாயிற்றுகிழமையிலும் சிறப்பு வகுப்புகள் நடத்தியது நான் அதிக மதிப்பெண் பெற உறுதுணையாக இருந்தது. இன்ஜினியரிங் படிக்க ஆசைப்படுகிறேன்" என்றார். மூன்றாவது இடம் பிடித்துள்ள மாணவி நித்யாவின் தந்தை நாகராஜ் கொத்தனார். தாய் தையல்நாயகி இல்லத்தரசி. நித்யா கூறுகையில், "பள்ளி முதல்வர் அனுசுயா, துணை முதல்வர் மற்றும் பாட ஆசிரியர்கள் அதிக மதிப்பெண் பெற மிகவும் ஊக்குவித்தனர். பொதுத்தேர்வு நேரத்தில் கூடுதல் நேரம் ஒதுக்கிப் படித்தேன். டாக்டர் ஆக விரும்புகிறேன். குறிப்பாக, கார்டியாலஜி துறையில் நிபுணராகி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என ஆசைப்படுகிறேன்" என்றார்.