உள்ளூர் செய்திகள்

பள்ளிகள் திறந்தாலும் பாடங்கள் நடத்தப்படுமா?

சமச்சீர் கல்வியை நிறுத்துவதற்காக தமிழக அரசு கொண்டு வந்த சட்ட திருத்த மசோதாவிற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்தது. மேலும், சமச்சீர் கல்வியையே தொடர வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில், உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இதனால், பள்ளிகள் திறப்பது மேலும் தள்ளிப்போகலாம் அல்லது பள்ளிகள் திறந்தாலும் பாடம் நடத்துவது தள்ளிப்போக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எஸ்.எஸ்.எல்.சி., மாணவர்கள் சமச்சீர் கல்வி திட்ட பாட புத்தகம் வருவதற்கு காலதாமதமானதால் நெட்மூலம் அனைத்து பாடங்களையும் ஆயிரகணக்கில் ரூபாய் செலவு செய்து, ஜெராக்ஸ் எடுத்து படித்து வந்தனர். இந்நிலையில தமிழக அரசின் சமச்சீர் கல்வி திட்டம் ரத்து என்பது எஸ்.எஸ்.எல்.சி., மாணவர்களை அதிர்ச்சி அடையவைத்தது. மேலும் பழைய பாடதிட்டமே தொடரும் என அறிவித்ததால் எஸ்.எஸ்.எல்.சி., மாணவர்கள் பழைய பாடபுத்தகங்களை வாங்கி டியூஷன் மூலம் படிக்க துவங்கினர். முதலில் ஒருமாதம் சமச்சீர் கல்வி கற்று வந்த மாணவர்கள் மீண்டும் பழைய பாடபுத்தகத்துக்கு மாறினர். சமச்சீர் கல்விதிட்டம் தரமானதாக இல்லை. மாணவர்களின் கல்விதரத்தை உயர்த்தும் வகையில் இல்லை. சமச்சீர் கல்விதிட்டத்தை வலுப்படுத்தி, தரத்தை உயர்த்தி அமல்படுத்தப்படும். அதுவரை இந்த ஆண்டு பழைய திட்டம் அமலில் இருக்கும் என தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில் சமச்சீர் கல்வி திட்டத்தை நிறுத்தும் தமிழக அரசின் சட்டதிருத்தத்திற்கு இடைக்கால தடைவிதித்து சென்னை ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியது. இதனால் எஸ்.எஸ்.எல்.சி., மாணவ, மாணவியர் மீண்டும் குழப்பம் அடைந்துள்ளனர். எந்த பாடம் படிக்க வேண்டும் என தெரியாமல் திணறுகின்றனர். எஸ்.எஸ்.எல்.சி., மாணவர்கள் எழுதும் முதல் அரசு பொதுத்தேர்வாகும். இந்த தேர்வில் மாவட்ட, மாநில அளவில் முதலிடம் பெறுவதற்காக மாணவ, மாணவியர் ஒன்பதாம் வகுப்பு இறுதியில் இருந்தே எஸ்.எஸ்.எல்.சி., பாடம் படிக்க துவங்குகின்றனர். சில பள்ளிகளில் ஜூன் மாதத்திலே எஸ்.எஸ்.எல்.சி., க்கு பாதி பாடங்கள் நிறைவடைந்திருக்கும். கணிதம், அறிவியல் பாடங்களில் குறிப்பிட்ட பகுதியை முடித்திருப்பார்கள். ஆனால் இந்த ஆண்டு இந்த நேரத்தில் தான் பள்ளி திறக்க உள்ளது. அதிலும் வரும் 15ம் தேதி பள்ளிகள் திறந்த பின்னரே பாடதிட்டம் அறிவிக்கப்படும் என கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்நிலையில் சமச்சீர் கல்வி திருத்த மசோதா இடைக்கால தடையை எதிர்த்து அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்படுகிறது. இதனால் பாடத்திட்டம் குறித்து உறுதியான முடிவு தற்போது எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மாணவர்களுக்கும், பெற்றோர்களும் எந்த பாட திட்டம் என்பதில் குழப்பம் நீடிக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்