உள்ளூர் செய்திகள்

ஏழை மாணவருக்கு கிடைத்தது உதவி

வறுமையில் தவித்த மாணவருக்கு, ஏராளமானோர் உதவி செய்ததால், அவர் கவுன்சிலிங்கில் பங்கேற்று இன்ஜினியரிங் கல்லூரியில் சேர உள்ளார். தர்மபுரி மாவட்டம், ஏமனூர் கிராமத்தில் உள்ள மாணவர்கள், பரிசல் மூலம் அணையை கடந்து மறுகரையில் உள்ள சேலம் மாவட்டம், கொளத்தூர் பகுதியில் பள்ளிகளில் படிக்கின்றனர். ஏமனூரைச் சேர்ந்த ராசன், சின்னம்மாள் தம்பதியரின் மகன் சத்யராஜ், எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில், 452 மதிப்பெண் பெற்றார். குடும்ப வறுமை காரணமாக, கட்டிட வேலைக்குச் சென்றார். மீண்டும் பள்ளியில் சேர்ந்த சத்யராஜ், பிளஸ் 2 தேர்வில், 1,052 மதிப்பெண் பெற்றார். இன்ஜினியரிங் கவுன்சிலிங்குக்கு விண்ணப்பித்த போதிலும், கவுன்சிலிங்கில் பங்கேற்க பணம் இல்லாமல் தவித்தார். இது குறித்த செய்தி, கடந்த 28ம் தேதி, தினமலர் நாளிதழில் வெளியானது. அதைத் தொடர்ந்து, வாசகர்கள் பலர் மாணவனுக்கு பண உதவி செய்தனர். அதன் மூலம், கவுன்சிலிங்கில் பங்கேற்ற சத்யராஜ், இன்ஜினியரிங் கல்லூரியில் சேர உள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: வாசகர்கள் பலர் என்னை மொபைலில் தொடர்பு கொண்டு, எனக்கு உதவி செய்வதாக கூறினர். பலர் எனக்கு காசோலை அனுப்பினர். கவுன்சிலிங்கில் பங்கேற்கக் கூட முடியாத நிலையில் இருந்த எனக்கு, கருணை உள்ளம் கொண்டவர்கள் இதுவரை, 30 ஆயிரம் ரூபாய் அனுப்பியுள்ளனர். அந்தப் பணத்தில் கவுன்சிலிங்கில் பங்கேற்க, 5,000 ரூபாய்க்கு, டிடி எடுத்துள்ளேன். மீதிப் பணம் வங்கியில் உள்ளது. கவுன்சிலிங் மூலம் கல்லூரியில் சீட் கிடைத்ததும், பண உதவி செய்வதாக கூறியுள்ளனர். அதனால், எப்படியும் இன்ஜினியரிங் கல்லூரியில் சேர்ந்து விடுவேன், என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்