உள்ளூர் செய்திகள்

இன்று உலக எழுத்தறிவு தினம்

இது தவிர எழுத்தறிவு பெற்றவராக கருத குறிப்பிட்ட வகுப்பு வரை படித்திருக்க வேண்டும் என எந்த அளவும் தீர்மானிக்கப்படவில்லை. உலகம் முழுவதும் ஆண்டு தோறும் செப்.8ம் தேதி, உலக எழுத்தறிவு தினம் கொண்டாடப்படுகிறது. இத்தினம் யுனெஸ்கோ அமைப்பால் 1965ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தனி மனிதன், இனம், சமூகம் என அனைவருக்கும் எழுத்தறிவிக்க வேண்டும் என்பதை இத்தினம் வலியுறுத்துகிறது. எழுத்தறிவு என்பது மனித உரிமை. வறுமையை ஒழிக்க, குழந்தை இறப்பை தவிர்க்க, மக்கள் தொகை வளர்ச்சியை கட்டுப்படுத்த, ஆண் - பெண் விகிதாசாராசாரத்தை தக்க வைக்க, ஜனநாயகத்தில் அமைதி; வளர்ச்சி ஏற்பட, கல்வியின் இருதயமான எழுத்தறிவு அவசியம். இது இன, சமூக பாகுபாடின்றி கிடைக்க வேண்டும். உலகில் 2008ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 79 கோடியே 60 லட்சம் வயதுவந்தோர் (15 வயதுக்குட்பட்ட), எழுத்தறிவு இல்லாதோர்களாக உள்ளனர். ஐந்து இளைஞர்களில் ஒருவர் எழுத்தறிவு பெறவில்லை. அதில் மூன்றில் இரண்டு பேர் பெண்கள். 6 கோடியே 74 லட்சம் குழந்தைகள் பள்ளிக்கு செல்லவில்லை என கணக்கிடப்பட்டுள்ளது. உலகிலேயே தெற்காசியாவில் தான் வயதுவந்தோர் எழுத்தறிவு (62 சதவீதம்)குறைவாக உள்ளது. இளைஞர்களில் 13 கோடியே 10 லட்சம் எழுத படிக்க தெரியாதவர்களாக உள்ளனர். இதில் 64 சதவீதம் பேர் பெண்கள். நாட்டில் சமீபத்தில் வெளியிடப்பட்ட 15வது மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இந்தியாவின் எழுத்தறிவு, 74 சதவீதமாக உள்ளது. இதில் ஆண்கள் 82.14 சதவீதம், பெண்கள் 65.46 சதவீதம். இது 2001ம் ஆண்டு கணக்கெடுப்பை விட 9.2 சதவீதம் அதிகரித்துள்ளது. தமிழக எழுத்தறிவு சதவீதம் 80.4 சதவீதமாக உள்ளது. இது 2001ம் ஆண்டு கணக்கெடுப்பை விட 6.9 சதவீதம் அதிகம். இப்பட்டியலில் இருந்து பெண்கள் எந்தளவுக்கு எழுத்தறிவில் பின்தங்கியுள்ளனர் என்பதை அறிந்து கொள்ளலாம். பெண்கள் எழுத்தறிவு பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். உலகில் 2015ம் ஆண்டுக்குள் அனைத்து நாடுகளும் 15 வயதுக்குட்பட்ட அனைவருக்கும் கல்வி அளிப்பதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் "அனைவருக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி" அறிமுகப்படுத்தப்பட்டது. நாட்டின் மக்கள் தொகையில் 35 சதவீதத்தினர் 15 வயதுக்கு உட்பட்டோர். இத்திட்டத்தை அரசு உறுதியோடு செயல்படுத்தினால் நூறு சதவீத எழுத்தறிவு என்ற இலக்கை அடையலாம். கல்விக்காக செலவிடும் தொகை ஆண்டுதோறும் அதிகரித்து வந்தாலும், அது மக்களிடையே பெரும் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. எனவே அனைவருக்கும் தரமான கல்வியை தர அரசு முனைப்புடன் செயல்பட வேண்டும். இதற்காக, கல்விக்கு கடன் தந்து ஊக்குவிக்கவும் வேண்டும். கிராமப்புற மாணவர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். உலகில் முழு எழுத்தறிவு பெற்ற ஒரே நாடு என்ற பெருமையை ஜார்ஜியா பெற்றுள்ளது. இந்தியா 134வது இடத்தில் உள்ளது. எழுத்தறிவு சதவீதத்தில் நாட்டிலேயே கேரளா முதலிடத்தில் உள்ளது. இப்பட்டியலில் தமிழகம் (80.33) 14வது இடத்தில் உள்ளது. பீகார் (63.82) கடைசி இடத்தில் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்