தனியார் கல்லூரிகளின் கட்டணங்கள் முறைப்படுத்தப்படுமா?
ஒவ்வொரு கல்லூரிக்கும் கட்டணத்தை நிர்ணயம் செய்ய, மருத்துவ, பொறியியல் கல்லூரிகளைப் போன்று, அரசு சார்பில் கமிட்டி அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. பொறியியல், மருத்துவ படிப்புக்கு நாளுக்கு நாள் மவுசு கூடியதை அடுத்து, கலை, அறிவியல் கல்லூரிகளுக்கான முக்கியத்துவம் குறைந்தது. இருப்பினும், கலை, அறிவியல் கல்லூரிகளில் உள்ள கம்ப்யூட்டர் சயின்ஸ், வணிகவியல், விஷுவல் கம்யூனிகேஷன், ஆங்கில இலக்கியம், இயற்பியல், வேதியியல் போன்ற படிப்புகளுக்கு, தொடர்ந்து கடும் கிராக்கி இருந்து வருகிறது. தமிழகத்தில் உள்ள கலை-அறிவியல் கல்லூரி படிப்புகளை நான்கு வகையாக பிரிக்கலாம். அவை, அரசுக் கல்லூரிகள், அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகள், அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகளில் உள்ள சுயநிதி படிப்புகள், சுயநிதி கல்லூரிகள் ஆகும். இந்த நான்கு வகை கல்லூரிகளிலும் வெவ்வேறு விதமான கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன.அரசுக் கல்லூரிகளில் கல்வி இலவசம், கட்டணம் கிடையாது. அரசு உதவிபெறும் தனியார் கல்லூரிகளில் இளநிலை படிப்புகள் மட்டும் இலவசம். ஆனால், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உள்ள சுயநிதி படிப்புகளுக்கான கட்டணத்தை, கல்லூரி நிர்வாகமே முடிவு செய்கிறது. இதுபோல், சுயநிதி கல்லூரிகளில் உள்ள எல்லா படிப்புகளுக்கும், அவர்கள் சொல்வதுதான் கட்டணம். பல தனியார் கல்லூரிகளில், கம்ப்யூட்டர் சயின்ஸ், விஷுவல் கம்யூனிகேஷன் போன்ற படிப்புகள் சுயநிதி படிப்புகளாக தொடங்கப்பட்டுள்ளன. சுயநிதி படிப்புகளுக்கு, கல்லூரி நிர்வாகம் தங்கள் இஷ்டம்போல் கட்டணத்தை நிர்ணயித்துக் கொள்ளலாம். யாரும் கேட்க முடியாது. அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகளில் சுயநிதி படிப்புகளை துவங்க, பல்கலைக்கழகம் தங்கு தடையின்றி அனுமதி வழங்கி வருகிறது என்றும் புகார் கூறப்படுகிறது. இது, ஒருவகையில் தனியார் கொள்ளைக்கு இடமளிக்கும். இதனால், சுயநிதி கல்லூரிகளிலும், அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகளில் உள்ள சுயநிதி படிப்புகளுக்கும் இந்த ஆண்டு அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதாக மாணவர்கள் புகார் கூறுகின்றனர். கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புக்கு 40 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள, அரசு உதவி பெறும் பிரபல கல்லூரி ஒன்றில், பி.காம்., படிப்புக்கு, ஒரு லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கும் மாணவி ஐஸ்வர்யா கூறும்போது, &'அதிக கட்டணம் காரணமாக என்னுடன் படித்தவர்கள் பலர், கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் பி.காம்., படிக்க ஆர்வம் இருந்தும், வேறு வழியில்லாமல் பி.ஏ., வரலாறு, பி.ஏ., பொருளாதாரம் ஆகிய படிப்புகளில் சேர்ந்துள்ளனர்&' என்றார். இதுகுறித்து, பல்கலைக்கழக ஆசிரியர் சங்க பொதுச் செயலர் பிச்சாண்டி கூறும்போது, &'சுயநிதிக் கல்லூரிகள், அரசு உதவிபெறும் தனியார் கல்லூரிகளில் உள்ள சுயநிதிப் படிப்புகளுக்கு கட்டணத்தை நிர்ணயிக்க, தனி குழு அமைக்க வேண்டும். மருத்துவ, பொறியியல் கல்லூரிகளில் உள்ளது போல் ஒற்றைச் சாளர முறையில் மாணவர் சேர்க்கைக்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்&' என்றார். அதிக கட்டண வசூல் குறித்து, அகில இந்திய பல்கலைக்கழக ஆசிரியர் சங்க கூட்டமைப்பின் தென்னிந்திய செயலர் பழனி கூறியதாவது: நிதியைப் பெருக்குவதாகக் கூறி, பல்கலைக்கழகங்களே சுயநிதி படிப்புகளை நடத்தி வருவதால், தனியார் கல்லூரிகளில் சுயநிதிப் படிப்புகளை துவங்க, பல்கலைக்கழக நிர்வாகம் தாராளமாக அனுமதி தருவதில் வியப்பேதுமில்லை. சுயநிதி கல்லூரி கட்டணத்தை நிர்ணயிக்க தனி கமிட்டி அமைக்கப்பட வேண்டும். அதைவிட முக்கியம், அரசு உதவிபெறும் தனியார் கல்லூரிகளில் உள்ள சுயநிதி படிப்புகளை அறவே நீக்க வேண்டும். இப்போதுள்ள சுயநிதி படிப்புகளை, அரசு உதவி பெறும் படிப்புகளாக மாற்ற வேண்டும். சென்னை பல்கலைக்கழகம் உள்ளிட்ட, அரசின் கீழ் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு வழங்கி வந்த நிதியை, அரசு குறைத்து வருகிறது. ஆனால், தமிழகத்தில் உள்ள பிரபல தனியார் பல்கலைக்கழகத்துக்கு, ஆண்டுதோறும் 100 கோடி ரூபாய் அரசு மானியம் வழங்கி வருகிறது. உயர்நிலைக் குழு அமைத்து இதையெல்லாம் சரிசெய்ய வேண்டும். இவ்வாறு பழனி கூறினார். கலை, அறிவியல் கல்லூரிகளில், 16 சதவீதமாக உள்ள மாணவர் சேர்க்கையை, 25 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. மாணவர் எண்ணிக்கை உயர வேண்டுமானால், கட்டணத்தை சீரமைத்து, உயர்கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும் என்பதே பெற்றோர், ஆசிரியர்களின் எதிர்பார்ப்பு.