உள்ளூர் செய்திகள்

நரிக்குறவ மாணவர்களின் கல்வி தாகம்!

சென்னை: எழும்பூர் அருங்காட்சியக அரங்கில் செப்., 9ம் தேதி நடந்த உலக எழுத்தறிவு தின விழாவில், கல்வியின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், வேலூர் வளர் கல்வி திட்ட கலைக் குழுவினர், பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் இந்நிகழ்ச்சிகளை கண்டுகளித்தனர். அரங்கின் முன்வரிசையில் மூன்று நரிக்குறவ சிறுவர்கள் தரையில் அமர்ந்து, சக மாணவர்களைப் போல் கைகளை தட்டி, ஆர்ப்பரித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ‘வந்தே மாதரம்’ பாடலை மாணவர்களோடு சேர்ந்து உணர்ச்சிபொங்க நரிக்குறவ சிறுவர்களும் பாடினர். அரங்கத்தில் இவர்கள் மட்டும் வித்தியாசமாக தெரியவே, அனைவரும் கவனித்து ஆச்சரியப்பட்டனர். விழா துவங்கிய சிறிது நேரத்தில், காலியாக இருந்த சேரில் உட்காருமாறு சிலர் கூற, சக மாணவர்களைப் போல் தங்களுக்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது என்ற மகிழ்ச்சி துள்ளலுடன் மேடைக்கு எதிரே வந்து அமர்ந்தனர். கோயம்பேடு அருகேயுள்ள வானகரம் ஈஸ்வரன் கோவில் தான் இந்த நரிக்குறவ சிறுவர்களின் வசிப்பிடம். சரத்குமார், கோபி மற்றும் குமாரி ஆகிய மூன்று பேரையும், எஸ்.எஸ்.ஏ., இயக்கத்தில் பணியாற்றும் சந்திரலேகா, விழாவிற்கு அழைத்து வந்திருந்தார். சரத்குமாரிடம் பேசியபோது, “எனக்கு ஐந்து சகோதரர்கள். ஒரு தங்கை. ஊசி, மணி விற்பதும், இரும்பு பொருட்களை பொறுக்குவதும் தான் எங்கள் குடும்பத்தினருக்கு தொழில். படிப்பதற்கு எனக்கு ஆர்வமாக இருக்கிறது. தமிழை எழுத்துக் கூட்டி படிப்பேன். கல்வி மிகவும் முக்கியம் என்று இந்த விழாவில் கூறினர். நிகழ்ச்சிகள் அனைத்தும் எங்களுக்கு நன்றாக புரிந்தது,” என்றபடி தனது கொண்டையை சரிசெய்தார். இவர்களை அழைத்து வந்த சந்திரலேகா கூறுகையில், “ஒரு ஆண்டாக அவர்கள் வசிக்கும் கோவில் பகுதிக்கே சென்று தினமும் ஒரு மணி நேரம் பாடம் நடத்துகிறேன். படிப்பதில் ஆர்வமாக இருக்கின்றனர். ஆனால், பள்ளிக்கு வர மறுக்கின்றனர். பள்ளி நேரம் போக மற்ற நேரத்தில் குடும்பத்தினருடன் சேர்ந்து ஊசி, மணி விற்கவும், இரும்பு பொருட்களை பொறுக்கவும் சென்று விடுகின்றனர். இவர்கள் முழுமையாக ஒத்துழைப்பு கொடுத்தால் மற்ற மாணவர்களைப் போல் நல்ல நிலைக்கு கொண்டு வரலாம்,” என்று நம்பிக்கை தெரிவித்தார். படிப்பதில் ஆர்வம் இருந்தும், குடும்பத்தினரை காப்பாற்றுவதற்காக ஊசி, மணி விற்பதாக சிறுவர்கள் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்