சி.ஏ.,படித்தால் வெளிநாட்டில் நல்ல வரவேற்பு
கோவை: “இந்தியாவில் சி.ஏ., படிப்போருக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது,” என, ஐ.சி.ஏ.ஐ., துணைத்தலைவர் உத்தம் பிரகாஷ் கூறினார். இந்திய பட்டய கணக்காளர் சங்கம்(ஐ.சி.ஏ.ஐ.,) கோவை கிளை சார்பில், சர்வதேச தரத்தில் கணக்கு சான்றிதழ் வெளியிடும் முறை, வருமான வரி தணிக்கை குறித்த கருத்தரங்கு, கோவையில் செப்., 14ம் தேதி நடந்தது. இதை, சங்க துணைத்தலைவர் உத்தம் பிரகாஷ் அகர்வால் துவக்கி வைத்தார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:தற்போது, 3.5 லட்சம் பேர் சி.ஏ., படிப்பை மேற்கொண்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும், 12 ஆயிரம் பேர் சி.ஏ., தகுதி பெறுகின்றனர். ஆனால், தகுதி பெறுவோரின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில், இவர்களுக்கான தேவை பல மடங்கு அதிகமாக உள்ளது. இந்தியாவில் சி.ஏ., படிப்போருக்கு, சர்வதேச அளவில் நல்ல வரவேற்பு உள்ளது. இத்தகுதி பெறுவோருக்கு முதலாண்டிலேயே அதிக சம்பளம் கிடைக்கிறது. படிப்பை படித்தோர், எந்த துறையிலும் பணியில் சேரலாம். சி.ஏ., படிப்பை மூன்றரை ஆண்டு படிக்க வேண்டும்; இதன் முதல்கட்டமாக, ஓராண்டு ‘அக்கவுன்டிங் டெக்னீஷியன்’ எனும் சான்றிதழ் படிப்பை முடிக்க வேண்டும். இதை முடிப்போருக்கு, அக்கவுன்டிங் துறையில் நல்ல சம்பளத்துடன், உடனடியாக வேலை கிடைக்கும். இந்தியாவில், 117 ஐ.சி.ஏ.ஐ., கிளைகள் உள்ளன; வெளிநாடுகளில், 20 கிளைகள் உள்ளன. அடுத்த வெளிநாட்டு கிளை, சிங்கப்பூரில் விரைவில் துவங்கப்பட உள்ளது. கோவை உட்பட நான்கு இடங்களில் திறன் மிகு பயிற்சி மையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள அனைத்து சி.ஏ., படித்தோருக்கும் கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்கும் பணி நடந்து வருகிறது. இவ்வாறு, உத்தம் பிரகாஷ் அகர்வால் கூறினார்.