வெற்றி ஒரு இனிய விளையாட்டு!
தேர்வில் வெற்றி, வேலையில் வெற்றி, காதலில் வெற்றி என்று எல்லா விஷயங்களிலும் தோல்வியை சந்திக்க நாம் தயாராக இல்லை. அதே சமயத்தில் வாழ்வில் துணிச்சலாக இடர்பாடுகளை எதிர்கொண்டு எதிர்நீச்சல் போட நாம் தயங்குகிறோம். வெற்றிக்கனியை தட்டிப்பறிக்க, இடர்பாடுகளை ஏற்றுக்கொள்ளும் (Risk taking) மனோபாவம் மிகவும் அவசியம். தோல்வி என்பது தள்ளிப்போடப்பட்ட வெற்றி (Postponed Success). ஒரு வகையில் பார்த்தால் தோல்வி என்பது ஒரு பின் விளைவைப் பற்றிய தகவல்(Feedback). வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே மிகசிறிய இடைவெளிதான் இருக்கிறது. ஒரு அதிகபட்ச முயற்சி (Extra effort) தோல்வியை தவிர்த்து வெற்றி வாய்ப்பை வழங்க கூடியதாக இருக்கும். உண்மை இவ்வாறு இருக்கும் போது நாம் ஏன் தோல்வி பயத்தோடு துவளவேண்டும். படிக்கும் காலத்திலும், பணியிடத்தில் வேலை செய்யும் போதும் வெற்றியை தேடி தொடர்ந்து முயற்ச்சிகள் எடுப்பதை எந்த காலகட்டத்திலும் நாம் கைவிட கூடாது. சில சமயங்களில் முயற்சி செய்தும் முடியாமல் போகலாம். அதற்காக முயற்சி செய்ய தவற கூடாது. (It`s better to try and fail, ratherthan fail to try). நம்மிடையே உள்ள திறமைகளை முழுமையாக பயன்படுத்தும் போது அதன் விளைவாக வெற்றி நம்மை நோக்கி விரைந்து வரும். வெற்றி நம்மை தானாக தேடி வராது. நாம் தான் அது நம்மை தேடி வரும்படி செய்ய வேண்டும். வாழ்வில் நாம் அடைய வேண்டிய குறிக்கோள்களை தீர்க்கமாக முடிவு செய்து அதை நிறைவேற்றிக் காட்ட நாம் திட்டம் (Roadmap) தீட்ட வேண்டும். அந்த திட்டத்தின்படி எடுக்க வேண்டிய முயற்ச்சிகளை கவனத்துடன் குறிப்பிட்ட காலத்திற்குள் செய்து முடிக்க வேண்டும். வெற்றியின் ரகசியத்தைப்பற்றி சொல்லும் போது “குறிக்கோளுக்கு செலுத்தும் கவனத்தை அதை அடைய மேற்கொள்ளும் பாதைக்கும் செலுத்த வேண்டும் என்பதில் வெற்றிக்கான அனைத்து ரகசியங்களும் அடங்கி உள்ளது” என்று சுவாமி விவேகானந்தர் தெள்ளத்தெளிவாக குறிப்பிடுகிறார். கனவுகளோடு நான்கு சுவர்களுக்கு மத்தியில் அமர்ந்திருந்தால் காரியம் எதுவும் நடக்காது. வீட்டிற்கு வெளியே வந்து வெற்றியை தேடி படையெடுக்க வேண்டும். விடா முயற்சியும், விவேகமும் நம் வெற்றிப்பயணத்தில் நமக்கு உற்ற நண்பர்களாக இருப்பார்கள். மாபெரும் வெற்றிகள் கூட ஒரு சிறிய தொடக்கத்தின் வெளிப்பாடாகத்தான் இருக்கும். நாம் வாழ்வில் எப்படிப்பட்ட இக்கட்டான காலத்திலும் வாழ்க்கையின் மேல் உள்ள பிடிப்பையும், ஆர்வத்தையும் கைவிட்டுவிடாமல் இருந்தால் அடுத்தடுத்து தோல்விகள் வந்த போதும் இறுதியில் வெற்றியை தட்டிச்செல்வோம் என்பதில் ஐயமேதுமில்லை. வாழ்க்கையும் ஒரு பயணம், வெற்றியும் ஒரு பயணம் தான். தோல்வியும், வெற்றியும் உள்ளடக்கியது தான் மனித வாழ்க்கை. வெற்றியும் தோல்வியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றது. தடைகற்களை ஏணிப்படிகளாக மாற்றும்போது வெற்றிக்கான விதை விதைக்கப்படுகிறது. நாம் சந்திக்கும் வாய்ப்புகளை தவறவிட்டுவிடாமல் அவைகளை திறன்பட பயன்படுத்தும் போது நாம் நினைத்ததை நடத்திக்காட்ட முடியும். வாய்ப்புகளை எப்போதும் எதிர்நோக்கி காத்திருக்க வேண்டும். நம்பிக்கை வாதிகள் (Optimists), கண்ணோட்டத்தில் ஒவ்வொரு பிரச்சனைக்குள்ளும் ஒரு வாய்ப்பு இருக்கும். நம்பிக்கையற்றவர்கள் (Pesimists) கண்ணோட்டத்தில் ஒவ்வொரு வாய்ப்பும் பிரச்சனைக்குறியது. ஒவ்வொரு மனிதனும் தன்னைத் தானே உருவாக்கி கொள்கிறான். ஆனால், வெற்றி பெற்றவர்கள் மட்டுமே இதை ஏற்றுக்கொள்ள எப்போதும் தயாராக இருக்கிறார்கள். எந்த வெற்றியும் அல்லது தோல்வியும் இறுதி என்று நாம் கருதிவிட கூடாது. மனஉறுதியோடு உழைத்தால் வாழ்வில் வெற்றியடைவது என்பது ஒரு போராட்டமாக தெரியாது, மாறாக அது ஒரு இனிய விளையாட்டு என்று உணர்வோம்! -டாக்டர் கே.ஜாபர் அலி