‘ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் தந்தால் முன்னேற்றம்’
சென்னை: “நமது அணுகுமுறையை மாற்றி, ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்தால், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் மேற்கத்திய நாடுகளைப் போல நாமும் முன்னேற முடியும்,” என சென்னை ஐ.ஐ.டி., முன்னாள் இயக்குனர் இந்திரேசன் தெரிவித்தார். முன்னாள் துணைவேந்தர் வா.செ.குழந்தைசாமி பெயரிலான சொற்பொழிவு, சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் நடந்தது. ‘400 ஆண்டுகளாக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் மேற்கத்திய நாடுகள் முன்னணியில் இருப்பது எப்படி? இந்தியாவும் முன்னேறுவது எப்படி?’ என்ற தலைப்பில், சென்னை ஐ.ஐ.டி., முன்னாள் இயக்குனர் இந்திரேசன் சொற்பொழிவாற்றினார். அவர் பேசியதாவது:இந்தியா 17ம் நூற்றாண்டு வரை உலகிலேயே பணக்கார நாடாக இருந்தது. அதற்கு அடுத்த ஆண்டுகளில், மேற்கத்திய நாடுகள் ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்ததைப் போல, நமது ஆட்சியாளர்கள் முக்கியத்துவம் கொடுக்காததால், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் பின்தங்கியிருக்கிறோம். பெரியவர்கள் சொல்லிவிட்டால் அவற்றை அப்படியே பின்பற்ற வேண்டும் என்ற கொள்கையில் நாம் வளர்ந்திருக்கிறோம். ஆனால், மேற்கத்திய நாடுகளில், ஒரு விஷயத்தை ஆராய்ந்து பார்த்து நிரூபிக்கும் வரை ஏற்றுக்கொள்வதில்லை. ஒரு விஷயத்தை ஆராயும்போது தவறுகள் இருந்தால், அவற்றை சரிசெய்து மேம்படுத்துகின்றனர். அவற்றை பாடப்புத்தகங்களிலும் இடம்பெறச் செய்கின்றனர். மாற்றங்களை ஏற்றுக்கொண்டதால் மேற்கத்திய நாடுகள் முன்னேறியிருக்கின்றன. நாம் மாற்றங்களை ஏற்றுக்கொள்வதில்லை. தொழில்நுட்ப முன்னேற்றத்தில் மேற்கத்திய நாடுகள் முன்னணியில் உள்ளன. தற்போது நாம் பயன்படுத்திவரும் பொருட்கள் அனைத்தும் மேற்கத்திய நாடுகள் உருவாக்கியவை. பொருளாதார முன்னேற்றத்திற்கு நிலம், தொழிலாளர்கள், மூலதனம், தொழில்நுட்பம் ஆகிய நான்கும் அடிப்படை தேவை. செழிப்பான கனிமவளங்களைக் கொண்ட பீகார், பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கிறது. உலகிலேயே தங்கம் இந்தியாவில் தான் அதிகளவில் உள்ளது. மனிதவளமும் இந்தியாவில் பெருமளவில் உள்ளது. எதிர்கால சமுதாயம் சிறப்பாக இருக்க வேண்டுமானால், புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள வேண்டும். நாம் நமது அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும். புதிய பொருட்களை கண்டுபிடிப்பதற்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும். நமது அணுகுமுறையை மாற்றி, ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் வழங்கினால் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில், மேற்கத்திய நாடுகளைப் போல நாமும் முன்னேற முடியும். நம் நாட்டில் சிந்தனைக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. மேற்கத்திய நாடுகளில் ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. இளைஞர்கள் ஆராய்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் வழங்கி, சிறிய சிறிய விஷயங்களைக் கண்டுபிடிக்க வேண்டும். நம் நாட்டில் 35 வயதானவர்கள் ஆராய்ச்சியை விட்டு விலகி நிற்கின்றனர். ஆராய்ச்சிக்கு வயது தடையில்லை. ஓர் இந்திய மாணவன் சிறந்து விளங்கினால், அமெரிக்க பல்கலைக் கழகம் தனது பல்கலைக் கழகத்தில் வந்து சேருமாறு அம்மாணவனுக்கு கடிதம் எழுதுகிறது. ஆனால், நமது பல்கலைக் கழகங்கள் இப்படி கடிதம் எழுத முடியாததே இங்குள்ள பிரச்னை. மாணவர்கள் ஆராய்ச்சி மேற்கொள்ளவும், கேள்விகளை கேட்பதற்கும் தேவையான வாய்ப்புகளை நாம் வழங்க வேண்டும். அப்போது தான், அவர்களது ஆராய்ச்சி திறமை வெளிப்படும். இவ்வாறு இந்திரேசன் பேசினார். சென்னை அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் மன்னர் ஜவகர் வரவேற்றார். பதிவாளர் (பொறுப்பு) சண்முகவேல் நன்றி கூறினார்.