உள்ளூர் செய்திகள்

‘செயல்திறன் பயிற்சிக்கு முக்கியத்துவம் அவசியம்‘

சென்னையில் பிறந்து வளர்ந்த நான், பள்ளிப் படிப்பையும், இளநிலை பொறியியல் பட்டத்தையும் இந்தியாவிலேயே முடித்தேன். ஆஸ்திரேலியாவில் ஓர் ஆண்டு எம்.எஸ்., படிப்பிற்கு பிறகு, அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் மற்றுமொரு எம்.எஸ்., பட்டம் பெற்றேன். அமெரிக்காவிலேயே வாணிபத்தையும் மேற்கொண்டேன். பல ஆண்டுகள் அங்கேயே தங்கியதை தொடர்ந்து கடந்த 2004ம் ஆண்டில் அமெரிக்க சிட்டிசன்ஷிப் கிடைத்தது. அமெரிக்க தூதரகத்தில் பணிபுரிவதற்கான பிரத்யேக தேர்வில் எனது அறிவுத்திறனால் வெற்றி பெற்றேன். முதல் பணியிடமே ‘இமிகிரன்ட் விசா‘ முதன்மை அலுவலாராக நைஜீரியாவில் அமைந்தது. அங்கு வித்தியாசமான அனுபவத்தை பெற்றேன். இவ்வாறு எனது சொந்த நாடான இந்தியாவிலும், பிறகு அமெரிக்காவிலும் கல்வி கற்று அமெரிக்க அரசுப் பணியிலேயே சேர முடிந்தது. அமெரிக்க அரசுப் பணிக்கான தேர்வில் 2 சதவீதத்திற்கும் குறைவானவர் மட்டுமே தேர்ச்சி பெற முடியும். அதுவும், எழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்வு, பாதுகாப்பு ஆய்வு என பல்வேறு கட்டத்திற்குப் பிறகுதான் ஒவ்வொருவரும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். எனினும் போதிய திறனை வளர்த்துக்கொண்டால், யாராலும் வெற்றி பெற முடியும். இந்தியக் கல்விமுறையை பொறுத்தவரை, இன்றளவும் ’தியரி’க்குத்தான் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. தியரி மிகவும் அவசியம். ஆனால் அதுபோல் ‘ஹேன்ட்ஸ் ஆன்’ போன்று செயல்திறன் பயிற்சிக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும். இந்திய பாடத்திட்டத்தில் செயல்திறன்  பயிற்சி மிகவும் குறைவாக உள்ளது. 60 சதவீதம் தியரி, 30 சதவீதம் செயல்திறன் பயிற்சி, 10 சதவீதம் இன்டர்ன்ஷிப் என்ற ரீதியில் வழங்கப்படவேண்டும். இந்தியாவை ஒப்பிடும்போது, அமெரிக்கா கல்வித் திட்டத்தில் தியரி குறைவே; செயல்திறன் பயிற்சி பிரதானமாக இருக்கிறது. பள்ளியிலும் மனப்பாடம் செய்யும் நிலை மாறவேண்டும். கலை படிப்புகளுக்கும் அமெரிக்காவில் அதிக வரவேற்பு உள்ளது. அமெரிக்காவில் படிக்க விரும்பும் வெளிநாட்டு மாணவர்களுக்காக பல்வேறு உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன. பல்கலைக்கழகங்கள் சிறந்த சர்வதேச மாணவர்களுக்கு நேரடியாக உதவித்தொகையை வழங்குகின்றன. சென்னை அமெரிக்கத் துணைத் தூதரகம், தமிழகத்திலுள்ள பல்வேறு தொழில் மற்றும் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும் முயற்சியில் அதிக கவனம் செலுத்த உள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அதிக அக்கறையுடன் நவீன  மாற்றங்கள் புகுத்திவருகிறது. இதற்கு தமிழகத்தைச் சேர்ந்த நிறுவனங்கள் வழங்கும் ஆலோசனைகள் மிகவும் பயனளிக்கின்றன. இவ்வாறு கிரிஷ் அரவிந்த் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்