உள்ளூர் செய்திகள்

திறமை இருந்தால் வேலை நிச்சயம்

திருச்சி: திருச்சி சிவானி இன்ஜினியரிங் கல்லூரி முதலாமாண்டு வகுப்புகள் துவக்க விழா நேற்று நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் மன்னர் ஜவஹர் பேசியதாவது: "இந்தியாவில் 298 மாநில பல்கலைகள், 190 நிகர்நிலை பல்கலைகள் உள்ளன. இது தவிர 44 மத்திய பல்கலைகள் உள்ளன. தரமற்ற கல்வி முறை, உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமை, சிறந்த ஆசிரியர்கள் இல்லாதது போன்ற காரணங்களால், இன்ஜினியரிங் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை ஆண்டுதோறும் குறைந்து வருகிறது. இவற்றை சரி செய்தால், மாணவர் சேர்க்கை எண்ணிக்கை உயர்த்த முடியும். இன்ஜினியரிங் பயில்வது எளிமையாகும். முதல் ஆண்டு மட்டுமே கடினமாக இருக்கும். அதன் பிறகு எளிதாக படித்து முடிக்க முடியும். நாள்தோறும் இரண்டு மணி நேரம் முழு கவனத்தையும் செலுத்தி படித்தால் போதுமானதாகும். கல்லூரிகளில் பயிலும் போதே, திறன் மேம்பாடு போன்ற இதர தகுதிகளை வளர்க்க உதவும் பயிற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். கல்லூரி படிப்பை முடித்த பிறகு இது சாத்தியமாகாது. எந்த தொழிற்சாலையும் படிப்புக்கு வேலை கொடுப்பது கிடையாது. மாணவர்களிடம் இருக்கும் தனித் திறன் அடிப்படையிலேயே பணியில் சேர்க்கும் நிலை உள்ளது. மேலும், தலைமை பண்பு, தொடர்பியல் திறன் ஆகியவற்றை வளர்த்துக் கொண்டால் போதுமானது." இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்