சிறு பருவத்திலேயே தவறுகளை திருத்தவேண்டும்
திண்டுக்கல்: "சிறு பிள்ளைகளிலேயே தவறுகளை திருத்தினால், அவர்கள் தொடர்ந்து தவறு செய்யமாட்டார்கள்," என, கலெக்டர் வெங்கடாசலம் பேசினார். இளைஞர்கள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்த திறன் வளர்ப்பு பயிற்சியில் கலெக்டர் வெங்கடாசலம் பேசியதாவது: "ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், குழந்தைகள் நலனில் தொடர்புடைய பல்வேறு துறையை சேர்ந்த ஆயிரம் அலுவலர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் உரிமைகள் என்ன என்பதை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். உளவியல் ரீதியாக அவர்களின் செயல்பாட்டை கண்காணித்து திறனை வளர்க்க ஆசிரியர்கள் பாடுபட வேண்டும். குழந்தைகள் பற்றி தகவல்கள் ஏதேனும் இருந்தால் 1098 "சைல்டு லைன்" என்ற எண்ணிற்கு போன் செய்தால் போதும், அவர்கள் உதவி செய்வார்கள். சிறு பிள்ளைகளிலேயே தவறுகளை திருத்தினால், அவர்கள் தொடர்ந்து தவறு செய்யமாட்டார்கள். கல்வித்திறனையும், ஒழுக்கத்தையும் மேம்படுத்தப்படும்," என்றார்.