உள்ளூர் செய்திகள்

கல்லூரியை மாற்றிக்கொள்ள மாணவிக்கு அனுமதி

புதுடில்லியின் பீதாம்புரா பகுதியில் உள்ள கேசவ் மகாவித்யாலயா கல்லூரியில் பி.எஸ்.சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் (ஹானர்ஸ்) இரண்டாம் ஆண்டு படித்து வந்த அனிகா ஜெயின் என்ற மாணவி சமீபத்தில் படிக்கும் கல்லூரியை மாற்றிக்கொள்ள அனுமதி கேட்டார். ஹன்ஸ்ராஜ் கல்லூரிக்கு மாறுதல் கேட்ட விண்ணப்பத்தை அவர் படித்த கேசவ் மகாவித்யாலயா கல்லூரி ஏற்க மறுப்புத் தெரிவித்ததுடன் அவருக்கு ‘என்.ஓ.சி.,’யும் வழங்க முடியாது என்று கூறிவிட்டது. இம் மாணவிக்கு ‘என்.ஓ.சி.,’ வழங்கி அவர் கேசவ் மகாவித்யாலயா கல்லூரியில் இருந்து விலகினால் போதுமான மாணவர் இல்லாத காரணத்தைக் காட்டி யூ.ஜி.சி.,யின் நிதியுதவி மறுக்கப்பட்டுவிடும் என்பதாலேயே அந்தக்கல்லூரி மறுப்பு தெரிவித்தது. இதனால் ஆத்திரமடைந்த அனிகா டில்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அனிகாவின் குடும்பம் டில்லியில் இருந்தபோது கேசவ் வித்யாலயாவில் சேர்ந்தார். ஆனால்  அவரது தந்தைக்கு டில்லியிலிருந்து ஆக்ராவுக்கு பணி மாற்றம் ஏற்பட்டதால் அவரது குடும்பத்தினர் ஆக்ராவுக்கு சென்றுவிட்டனர். இதனால் ஆக்ராவிலிருந்து டில்லிக்கு தினமும் பயணம் செய்து படிக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகியிருப்பதாக அனிகாவின் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் கூறினார். இதனை ஏற்றுக்கொண்ட டில்லி ஐகோர்ட் நீதிபதிகள் முறையான மற்றும் உண்மையான காரணத்தினால் இதுபோன்ற மாற்றங்கள் கோரப்படும்போது சாக்கு போக்குகளைச் சொல்லி கல்லூரி நிர்வாகங்கள் மறுக்கக்கூடாது என்று கண்டனம் தெரிவித்தனர். ஒரு மாற்றல் விண்ணப்பத்தைப் பரிசீலிக்கும் கல்லூரி முதல்வர் நியாயமான முறையில் அதனை ஆராயவேண்டும் என்றும், மாணவரை உரிமை கொண்டாடும் போக்கு கண்டிப்பிற்குரியது என்றும் உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. கல்லூரியின் பொருளாதார அல்லது இதர காரணங்களைக் காட்டி ஒரு மாணவரின் நியாயமான கோரிக்கையை மறுக்க எந்தக் கல்லூரிக்கும் உரிமை கிடையாது என்றும் ஐகோர்ட் திட்டவட்டமாகக் கூறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்