சென்னையில் அமெரிக்க பல்கலை கண்காட்சி
சென்னை: அமெரிக்க பல்கலைக்கழகங்களின் கண்காட்சி மற்றும் இந்திய மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி, சென்னையில் இம்மாதம், 10ம் தேதி நடக்கிறது. இதுகுறித்து, அமெரிக்க துணைத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கை: அமெரிக்காவின் அங்கீகரிக்கப்பட்ட, 29 பல்கலைக் கழகங்கள், கண்காட்சியில் பங்கேற்கின்றன. இப்பல்கலைக் கழகங்கள் நடத்தும் பட்டப் படிப்புகள் பற்றி இதன்மூலம் அறிந்து கொள்ள முடியும். மேலும், பல்கலையின் நிர்வாகிகள், இந்திய மாணவர்களுடன் நேருக்கு நேர் சந்தித்து, அமெரிக்க பல்கலைகள் நடத்தும் பட்டப் படிப்புகள், அதற்கு வேலைவாய்ப்பு சந்தையில் இருக்கும் வாய்ப்புகள் பற்றி எடுத்துரைக்கின்றன. நுங்கம்பாக்கம் தாஜ் கோரமண்டல் ஓட்டலில், மாலை, 3:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை நடக்கும் இக்கண்காட்சியில், அமெரிக்க பல்கலைக்கழகங்களின் விண்ணப்பங்கள் மற்றும் பட்டப் படிப்புகள் பற்றிய விளக்கக் குறிப்பேடுகள் ஆகியவையும் வழங்கப்படுகின்றன. இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.