விமான படை பணிக்கான நேர்முகத்தேர்வு
தாம்பரம்: தாம்பரம் விமானப் படையில், பல்வேறு காலி பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வு நேற்று நடந்தது. கிழக்கு தாம்பரம், ஐ.ஏ.எப்., சாலையில், இந்திய விமானப் படையின் பயிற்சி மையம் உள்ளது. அங்கு, நேற்று பல்வேறு காலி பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வு நடந்தது. குரூப் ஒய், குரூப் எக்ஸ் ஆகிய பிரிவுகளில் வரும் கல்வி ஆய்வாளர், ஆட்டோமொபைல் துறை, பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டது. காலை, 9 மணியில் இருந்தே, முகாமில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர். நேர்முகத்தேர்வில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்கள் சரி பார்ப்பு, உடல் மற்றும் உளவியல் சோதனைகள் நடத்தப்பட்டன. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தகுதி உள்ளவர்களுக்கான நேர்முகத்தேர்வு, வரும் 22ம் தேதி நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டது.