இலவச லேப்டாப் மாணவர்களிடம் வசூல்
மதுரை: மதுரையில் இலவச லேப்டாப்களுக்கு மாணவர்களிடம் பணம் வசூலிக்கப்பட்டது குறித்து கல்வி அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.நடப்பு கல்வியாண்டில் மாணவர்களுக்கான 14 வகை நலத்திட்டங்களையும் இம்மாதத்திற்குள் வழங்க மாவட்ட அதிகாரிகளுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதனால் இலவச சைக்கிள்கள், லேப்டாப், மூவகை சான்றிதழ்கள் வழங்குவதை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர். வெள்ள நிவாரணப் பணிகளில் அமைச்சர்கள் கவனம் செலுத்துவதால், அவர்களுக்காக காத்திருக்க வேண்டாம் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் கடந்த வாரம் முதல் லேப்டாப் வழங்குவது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. டிச.,15ல் மதுரை நகரில் சில பள்ளிகளில் லேப்டாப்கள் வழங்கப்பட்டன. அப்போது சில பள்ளிகளில் மாணவர்களிடம் தலா ரூ. 910 பெறப்பட்டு ஆசிரியர்களால் எழுதப்பட்ட பேப்பர் சீட் (டோக்கன்) வழங்கப்பட்டது. இதை காண்பித்த மாணவர்களுக்கு தான் லேப்டாப் வழங்கப்பட்டது. இதுகுறித்து வாட்ஸ் ஆப் மூலம் கல்வி அதிகாரிகளுக்கு புகார் அனுப்பப்பட்டது. அதிகாரி ஒருவர் கூறுகையில், டிச.,15ல் நடந்த நிகழ்ச்சியில் நகரில் உள்ள ஒரு பள்ளியில் மட்டும் லேப்டாப்பிற்கு பணம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை நடக்கிறது, என்றார்.