உள்ளூர் செய்திகள்

கோவைக்கு வேண்டும் விளையாட்டு அகாடமி!

கோவை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், விளையாட்டு வீரர்களின் நலனுக்காக, விளையாட்டு அகாடமி செயல்படும் நிலையில், கோவையில் இல்லாதது, வீரர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.  தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம், சிறந்த விளையாட்டு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு, விடுதிகளில் சேர்க்கப்படுகின்றனர். இவர்களுக்கு, தகுதியான பயிற்சியாளர்களால், பயிற்சி அளிக்கப்படுகிறது. சமீபத்தில், கோவையில் நடந்த மாநில ஓபன் ஜூனியர் தடகளப் போட்டிகளில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதியில் தங்கி பயிற்சி பெறும் வீரர், வீராங்கனைகள் வெற்றி பெற்று, ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனர். விடுதியை தவிர, வீரர்களின் திறமையை மேலும் பட்டைத் தீட்ட, விளையாட்டு அகாடமிகள் செயல்படுகின்றன. சென்னையில், ஸ்பிரின்ட் அண்ட் ஜம்ப்ஸ், டைவிங், ஆண்கள் மற்றும் மகளிருக்கான ஹாக்கி, நாகப்பட்டிணத்தில் ஆண்கள் கால்பந்து, தேனியில், மகளிர் வாலிபால், திருவண்ணாமலையில், மிடில் மற்றும் லாங்க் டிஸ்டன்ஸ், சிவகங்கையில், மகளிர் கால்பந்துக்கு என, தனித்தனி அகாடமிகள் செயல்படுகின்றன. இங்கு, வீரர்களுக்கு, சத்துமிக்க உணவு, விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. பள்ளி, கல்லுாரிகளில் படிக்கும் வீரர், வீராங்கனைகள், இங்கு தங்கி பயிற்சி பெற முடியாத நிலையில், அவர்களின் விடுமுறையில் பயிற்சி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. கோவை சேர்ந்த சிறந்த விளையாட்டு வீரர்கள், சென்னை சென்று பயிற்சி பெறுகின்றனர். இருந்தும், கோவையில் ஒரு அகாடமியை நிறுவ, எந்த ஒரு முயற்சியும் மேற்கொள்ளாதது, வீரர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. விளையாட்டு வீரர்களின் நலனுக்காக, இங்கு அகாடமியை ஏற்படுத்தி பயிற்சி தரும் பட்சத்தில், தேசிய, சர்வதேசப் போட்டிகளில் சாதிக்க ஊக்குவிப்பாக இருக்கும். எனவே, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், கோவையில் விளையாட்டு அகாடமியை ஏற்படுத்த வேண்டும் என்பதே, வீரர்கள் பலரின் வேண்டுகோளாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்