உள்ளூர் செய்திகள்

பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகரம், ஒன்றிய குடியிருப்பு மற்றும் ஆனைமலை ஒன்றிய குடியிருப்பு பகுதிகளில் பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது. பொள்ளாச்சி நகரம் மற்றும் கிராமங்களிலுள்ள, ஆறு முதல் 15 வயது வரை உள்ள பள்ளி செல்லா குழந்தைகள், ஐந்து முதல் 18 வயது வரையுள்ள மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளையும், வீடு வீடாகச்சென்று கணக்கெடுத்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. அதன்படி, கடந்த 5ம் தேதி முதல் பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் கணக்கெடுப்பு பணி துவங்கி வரும் 27ம் தேதி வரை நடைபெறுகிறது. இப்பணியில், ஆசிரியர் பயிற்றுனர்கள், சிறப்பாசிரியர்கள், தன்னார்வலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டுள்ளனர். வடக்கு ஒன்றியம்: பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்துக்குட்பட்ட, 112 குடியிருப்பு பகுதிகளில், இப்பணி மேற்கொள்ளப்படுகிறது. அனைவருக்கும் கல்வி இயக்க மேற்பார்வையாளர் (பொ) கவிதா மேற்பார்வை செய்து வருகிறார். இதுவரை, 22 பள்ளி செல்லா குழந்தைகளும் மாற்றுத்திறனாளி மாணவர்கள், 145 பேரும் கண்டறியப்பட்டுள்ளனர். தொடர்ந்து, இப்பணி வரும் 27ம் தேதி வரை நடைபெறும். தேர்தல் முடிந்ததும், மே 17ம் தேதி மீண்டும் கணக்கெடுப்பு பணி துவங்கியது. தெற்கு ஒன்றியம்: தெற்கு ஒன்றியம், 26 ஊராட்சிகளுக்குட்பட்ட குடியிருப்புகள் மற்றும், 36 வார்டுகளில் கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணியை அனைவருக்கும் கல்வி இயக்க மேற்பார்வையாளர் (பொ) அமிர்தவல்லி மற்றும் ஆசிரியர் பயிற்றுனர் மேற்கொண்டு வருகின்றனர். ஆசிரியர் பயிற்றுனர்கள் கூறுகையில், பள்ளி செல்லா மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் கணக்கெடுப்பு பணி துவங்கப்பட்டு நடைபெறுகிறது. இதுவரை மேற்கொண்ட கணக்கெடுப்பில், 19 பள்ளி செல்லா குழந்தைகள், ஐந்து மாற்றுத் திறனாளி மாணவர்களும் கண்டறியப்பட்டுள்ளனர், என்றனர். ஆனைமலை: அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், ஆனைமலை ஒன்றியத்திற்குட்பட்ட, 141 குடியிருப்பு பகுதிகளில், இப்பணி நடைபெறுகிறது. ஆசிரியர் பயிற்றுனர்கள், சிறப்பாசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் இப்பணி மேற்கொள்ளப்படுகிறது. ஆறு வயது முதல் 14 வயதிற்குட்பட்ட பள்ளி செல்லா குழந்தைகள், 5 முதல் 18 வயதிற்கட்பட்ட மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் கண்டறிந்து, பள்ளியில் மீளச் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொ) ராஜாராம் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்