பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு
உடுமலை: உடுமலை அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடந்த, பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பில், 20 குழந்தைகள் கண்டறியப்பட்டுள்ளனர். பொருளாதாரம் மற்றும், குடும்ப பிரச்னை காரணமாக குழந்தைகள் அடிப்படை கல்வி இழக்கக்கூடாது என்ற நோக்கத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்டம் செயல்படுகிறது. இடைநிற்றலில் கல்வி இழக்கும் மாணவர்களை பள்ளியில் சேர்க்கும் வகையில், ஆண்டுதோறும் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு நடக்கிறது. நடப்பாண்டு சட்டசபை தேர்தலையொட்டி, கணக்கெடுப்பு பணிகள் தாமதமாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், கடந்த 5ம் தேதி முதல் கணக்கெடுப்பு பணிகள் நடக்கின்றன. அனைவருக்கும் கல்வி இயக்க ஆசிரியர் பயிற்றுனர்கள், கல்வி ஆர்வலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்டோர் கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை நடந்த கணக்கெடுப்பில், உடுமலையில் பிற மாநிலங்களைச்சேர்ந்த, 9 பேர் உட்பட, 20 குழந்தைகள் கண்டறியப்பட்டுள்ளனர். கடந்தாண்டு நடத்திய கணக்கெடுப்பின் அடிப்படையில், பள்ளி செல்லா குழந்தைகளின் சதவீதம் இருபது சதவீதம் குறைந்துள்ளதாக ஆசிரியர் பயிற்றுனர்கள் தெரிவித்தனர். கணக்கெடுப்பு பணிகள், மே 2ம் தேதி வரை நடக்கிறது. கணக்கெடுப்பில் கண்டறியப்படும் குழந்தைகள் பள்ளி திறக்கப்படும் நாளன்று சேர்க்கப்படுகின்றனர்.