முழுவீச்சில் பொறியியல் கவுன்சிலிங் ஏற்பாடுகள்
விளையாட்டு வீரர்களுக்கான கவுன்சிலிங் ஜூலை 5ம் தேதியும், பிளஸ் 2வில் தொழிற்கல்வி படித்த மாணவர்களுக்கான கவுன்சிலிங் ஜூலை 6 முதல் 8ம் தேதி வரையும், உடல் ஊனமுற்றோருக்கான கவுன்சிலிங் ஜூலை 9ம் தேதியும் கவுன்சிலிங் நடக்கிறது. ஜூலை 10ம் தேதி முதல் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங் நடக்க உள்ளது. பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங்கின் இடையே, ஜூலை 20ம் தேதி வெளிமாநில மாணவர்களுக்கான கவுன்சிலிங் நடக்கிறது. அரசு பொறியியல் கல்லூரிகளில் ஆண்டுக்கு 7,550 ரூபாயும், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் ஆண்டுக்கு 8,500 ரூபாயும், தனியார் பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் தரச்சான்று பெற்ற பாடப்பிரிவுகளுக்கு 40 ஆயிரம் ரூபாயும், தரச்சான்று பெறாத பாடப்பிரிவுகளுக்கு 32 ஆயிரத்து 500 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தனியார் பொறியியல் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் 62 ஆயிரத்து 500 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழக கவுன்சிலிங் மூலம் தனியார் பொறியியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்கள், மூன்று வழிகளில் கல்விக் கட்டணத்தை செலுத்தும் முறையை அரசு கடந்தாண்டு அறிமுகப்படுத்தியது. இதன்படி, மாணவர்கள் சேரும் தனியார் பொறியியல் கல்லூரிகளின் வங்கிக் கணக்கில், அண்ணா பல்கலைக்கழகத்தில் அவ்வங்கியின் கிளை அலுவலகம் இருப்பின் அதில் கட்டணத்தை செலுத்தலாம். கடந்தாண்டு இம்முறை அறிமுகப்படுத்தப்பட்டபோது, பல கல்லூரிகளில் வங்கிக் கணக்கு துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. மேலும், இம்முறை குறித்து மாணவர்களுக்கு அதிகளவில் விழிப்புணர்வு இல்லாததால், குறைந்த அளவிலான மாணவர்களே வங்கியில் பணத்தைச் செலுத்தினர். பொறியியல் கவுன்சிலிங்கிற்கான விண்ணப்பத்துடன் கல்லூரி பற்றிய தகவல் புத்தகம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இப்புத்தகத்தில் கல்லூரிகள் பற்றிய விவரங்களுடன் கல்லூரியின் வங்கிக் கணக்கு எண்ணும் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசு ஒதுக்கீட்டில், குறிப்பிட்ட தனியார் பொறியியல் கல்லூரியில் சேரும் மாணவர்கள், அக்கல்லூரி வங்கிக் கணக்கில் கல்விக் கட்டணத்தை நேரடியாக செலுத்தலாம். பொறியியல் கவுன்சிலிங்கிற்கான ஏற்பாடுகள் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் வேகமாக நடந்துவருகின்றன. பொறியியல் மாணவர் சேர்க்கை செயலர் ரேமண்ட் உதரியராஜ் கூறியதாவது: கடந்த ஆண்டைப் போல கவுன்சிலிங்கிற்கு வரும் மாணவர்கள் காத்திருக்கும் இடம் முதல், கவுன்சிலிங் நடக்கும் இடம் வரை பந்தல் அமைக்கப்படும். கேண்டீன், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகள் செய்யப்படும். கவுன்சிலிங்கில் இடத்தை தேர்வு செய்யும் மாணவர்களுக்கு வங்கிக் கடன் வழங்க இதுவரை 15 வங்கிகள் ஸ்டால் அமைக்க விண்ணப்பித்துள்ளன. மறுகூட்டல், மறுமதிப்பீட்டிற்கு பெற்ற மதிப்பெண்கள் விவரத்தை தேர்வுத்துறை எங்களுக்கு கொடுத்துள்ளது. திருத்தப்பட்ட மதிப்பெண்கள் விவரம் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால் 1,300 மாணவர்களுக்கு, கட்-ஆப் மதிப்பெண் மாறியுள்ளது. சி.பி.எஸ்.இ., ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட இதர போர்டுகளில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் பாடங்களில் பெற்ற மதிப்பெண்களை, தமிழக போர்டு மதிப்பெணுடன் சமன் செய்யும், ‘நார்மலைசேஷன்’ முறையை பயன்படுத்துவது அவசியம், பொறியியல் கவுன்சிலிங் பொதுப்பிரிவில் எழவில்லை. வெளிமாநில மாணவர்களுக்கான பிரிவில் மட்டும் ஒரு பாடத்திற்கு இம்முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு ரேமண்ட் உதரியராஜ் கூறினார்.