ஏழை மாணவன் கல்விக்கு நிதியுதவி
குறிச்சி: மருத்துவ படிப்பில் சேர பணமின்றி தவித்த ஏழை மாணவனுக்கு, சுப்புலட்சுமி கருணாநிதி அறக்கட்டளை 10 ஆயிரம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளது. காரைக்குடியை சேர்ந்தவர் நாகேந்திரன்; கோவை எஸ்.எம்.எஸ்.வி., ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்தார். தனது படிப்புக்கு தேவையான நோட்டு, புத்தகங்களை வாங்குவதற்கு தேவைப்படும் பணத்தை, அதிகாலை, மாலை மற்றும் விடுமுறை நாட்களில் காய்கறி மார்க்கெட்டில் மூட்டை துõக்கும் பணியில் ஈடுபட்டு சம்பாதித்தார்; பிளஸ் 2 தேர்வில் 1,151 மதிப்பெண் பெற்றார். மருத்துவ படிப்பில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர இடம் கிடைத்துள்ளது; கட்டணம் செலுத்த நிதியில்லாமல் தவிக்கிறார். இதுகுறித்த செய்தி ‘தினமலர்’ நாளிதழில் 21ம் தேதி வெளியானது. இதைப் பார்த்த, கோவை ஈச்சனாரி கற்பகம் பல்கலை முதன்மை நிர்வாக அதிகாரி முருகையா, தனது தாயார் சுப்புலட்சுமி கருணாநிதி பெயரில் நடத்தப்படும் அறக்கட்டளை சார்பில், ஒவ்வொரு ஆண்டும் 10 ஆயிரம் ரூபாய் நிதி வழங்க முடிவு செய்தார். அதன்படி, இவ்வாண்டுக்கான தொகை 10 ஆயிரத்திற்கான ‘செக்’கை நாகேந்திரனின் தாயார் பெயருக்கு அனுப்பி வைத்தார்.