குஜராத்தில் கட்டாய பாடமாகும் ‘செஸ்’
ஆமதாபாத்: இளைய தலைமுறையை அறிவுசார் சமுதாயமாக மாற்றவும், அவர்களது மனதை ஒருமுகப்படுத்தவும், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி புதுமையான ஒரு திட்டத்தை மாநிலத்தில் செயல்படுத்தியுள்ளார். குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, சில ஆண்டுகளுக்கு முன் அஜர்பைஜான் நாட்டுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அங்குள்ள குழந்தைகள் ஆர்வமுடன் ‘செஸ்’ விளையாடுவதை பார்த்தார். முந்தைய சோவியத் யூனியனில் உள்ள மற்ற பகுதிகளை விட, அஜர்பைஜானில் உள்ள குழந்தைகள் சுறு சுறுப்பாக செயல்படுவதையும் கண்டார். செஸ் விளையாட்டிற்கு சர்வதேச அளவில் எட்டு ‘கிராண்ட் மாஸ்டர்’களை அஜர்பைஜான் உருவாக்கி கொடுத்துள்ளதையும் கேள்விப்பட்டார். இதையடுத்து, குஜராத் பள்ளிகளில் செஸ் விளையாட்டை கட்டாய பாடமாக்க முடிவு செய்தார். முதல்கட்டமாக, ஆமதாபாத் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் செஸ் விளையாட்டை அடுத்த ஆண்டில் இருந்து கட்டாய பாடமாக்கும் முன்னோடி திட்டத்தை செயல்படுத்த, மாநில கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக, மாநிலம் முழுவதும் இத் திட்டத்தை செயல்படுத்தவும் முடிவு செய்யப் பட்டுள்ளது. குஜராத் மேல்நிலை கல்வி வாரிய செயலர் படேல் கூறுகையில், ‘பள்ளிகளில் ஏற்கனவே விளையாட்டு பாட வேளை உள்ளது. இந்த நேரத்தில் மற்ற விளையாட்டுகளோடு சேர்த்து, செஸ் விளையாட்டும் கற்றுத் தரப்படும்’ என்றார். குஜராத் மாநில செஸ் விளையாட்டு சங்க துணை தலைவர் மயூர் படேல் கூறுகையில், ‘இந்த திட்டத்தின் மூலம், எதிர்காலத்தில் ஏராளமான செஸ் சாம்பியன்கள் உருவாவதோடு மட்டுமல்லாமல், எதிர்கால சந்ததியினரின் அறிவும் கூர்மையாகும்’ என்றார்.