நன்கொடையாளர்களை அலைக்கழிக்கும் பள்ளி கல்வித்துறை
அரசு பள்ளிகளை மேம்படுத்தும் நோக்கில், பல்வேறு உதவிகளைச் செய்வதற்கு நன்கொடையாளர்கள் முன்வந்தாலும், அவர்களை சரிவர பயன்படுத்திக் கொள்ளாமல் தமிழக பள்ளிக் கல்வித் துறை அலைகழிக்கிறது. இதனால், அரசு பள்ளிகளுக்கு கிடைக்க வேண்டிய வசதிகள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 23 ஆயிரத்து 395 ஆரம்பப் பள்ளிகள், 7,597 நடுநிலைப்பள்ளிகள், 2,176 உயர்நிலைப் பள்ளிகள், 2,100 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 35 ஆயிரத்து 268 அரசு பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில், சென்னை போன்ற பெரிய நகரங்களில் உள்ள பள்ளிகளிலும், நகரங்களை ஒட்டியுள்ள பள்ளிகளிலும் ஓரளவுக்கு அடிப்படை வசதிகள் இருக்கின்றன. சிறிய நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களைச் சார்ந்த அரசு பள்ளிகளில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாத நிலை நீடிக்கிறது. மரத்தடியில் வகுப்புகள் நடக்கும் காட்சியை இன்றைக்கும் பார்க்கலாம். பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித் துறைக்கான ஒதுக்கீடு 9,147 கோடியாக உயர்ந்திருந்தாலும், கழிப்பறைகள் இல்லாத, குடிநீர் வசதியில்லாத, போதிய கட்டட வசதிகள் இல்லாத அரசு பள்ளிகளே இல்லை என்று கூற முடியாது. இதை தமிழக அரசும் உணர்ந்திருப்பதால், அரசு பள்ளிகளை மேம்படுத்துவதற்காக புதிய திட்டத்தை அறிவித்தது. அரசு பள்ளிகளில் படித்து தற்போது சமுதாயத்தில் நல்ல நிலையில் இருப்பவர்கள், தொழிலதிபர்கள், செல்வந்தர்கள் ஆகியோரும், தனியார் நிறுவனங்களும் விரும்பினால், அரசு பள்ளிகளை தத்தெடுத்து அப்பள்ளிகளுக்கு தேவையான வசதிகளை அவர்களே முன்னின்று நிறைவேற்றித் தரலாம் என்பது தான் திட்டம். திட்டத்தை நிறைவேற்றியதும், அதில் நன்கொடையாளர்கள் பெயரை இடம்பெறச் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறை இணையதளத்தில், நன்கொடை அளிக்க விரும்புபவர்களுக்கான திட்டம் குறித்து விளக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளை மேம்படுத்துவதற்கும், பள்ளிகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பதற்கும் பல நன்கொடையாளர்கள் ஆர்வமாக இருக்கின்றனர். ஆனால், அவர்களை மாவட்ட அளவில் உள்ள கல்வித்துறை அதிகாரிகள் சரிவர பயன்படுத்திக்கொள்ளாமல் அலைக்கழிக்கின்ற கொடுமை நடக்கிறது. இதற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகளும் துணை போகின்றனர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளியை இரண்டாக பிரித்து, பெண்களுக்கென தனி பள்ளியை ஏற்படுத்துவதற்கு, சாய்ராம் கல்விக் குழுமத்தின் தலைவர் லியோ முத்து, 1995ல் மூன்று ஏக்கர் நிலம், அதன்பின் மேலும் கூடுதலாக மூன்றரை ஏக்கர் நிலம் என மொத்தம் ஆறரை ஏக்கர் நிலத்தை நகராட்சி பகுதியிலேயே நன்கொடையாக வழங்கியுள்ளார். அந்த ஊரைச் சேர்ந்தவர், அந்தப் பள்ளியில் படித்தவர் என்ற முறையில் வழங்கிய இந்த நன்கொடையை 14 ஆண்டுகளாக இன்றுவரை, அந்தப் பள்ளி நிர்வாகம் பயன்படுத்திக்கொள்ளவில்லை. அரசு பெண்கள் பள்ளி தனியாக உருவாக்கப்பட்டுள்ளபோதும், புதிய இடத்தில் அதற்கென கட்டடங்களை கட்டவோ, அந்த இடத்திற்கு பள்ளியை மாற்றவோ பள்ளி நிர்வாகமும், துறை அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை. பல ஆண்டுகளாக அரசு மருத்துவமனையாக இருந்த இடத்தில் பள்ளி மாற்றப்பட்டுள்ளது. இங்கு எந்தவிதமான வசதிகளும் கிடையாது. இதனால், 500க்கும் மேற்பட்ட மாணவிகள், மீண்டும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்குச் சென்று படித்து வருகின்றனர். இதற்கிடையே, நபார்டு வங்கி மூலம் பள்ளி கட்டடம் கட்டுவதற்காக ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அந்த நிதியை பயன்படுத்திக்கொள்ளவும் அதிகாரிகள் முன்வரவில்லை. இதனால், வந்த நிதி திரும்பிப் போயிருக்கிறது. இதேபோல, பல இடங்களின் நன்கொடையாளர்களை கல்வித் துறை அதிகாரிகள் அலைய வைக்கின்றனர். தனியார் பள்ளிகள் உள்கட்டமைப்பு வசதிகளை அதிகப்படுத்தி, தரமான கல்வியைக் கொடுக்க போட்டி போடுகின்ற நிலையில், அரசு பள்ளிகளில் அடிப்படைத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முன்வராத அதிகாரிகளும், ஆசிரியர்களும், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகளும் இருக்கும் வரை அரசு பள்ளிகளுக்கான சோதனை தீராது. அதிகாரிகளின் மெத்தனப் போக்கு தொடர்ந்தால், அரசு பள்ளிகளை மேம்படுத்த நன்கொடையாளர்கள் யாரும் முன்வர மாட்டார்கள். அரசு பள்ளிகளை மேம்படுத்தும் திட்டத்திற்கு முட்டுக்கட்டை போடும் அதிகாரிகள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுப்பதோடு, நன்கொடையாளர்களை முழு அளவில் பயன்படுத்திக்கொள்ள பள்ளிக் கல்வித்துறைக்கு உத்தரவிட வேண்டும்.