டில்லி பல்கலையில் ஹாஸ்பிடாலிட்டி படிப்பு
இந்த துறையில் நுழைய விரும்புபவர்கள் டில்லி பல்கலையில் ‘ஸ்கூல் ஆப் ஓபன் லேர்னிங்’ நடத்தும் ‘ஹாஸ்பிடாலிட்டி லைப்ஸ்டைல் பெர்சனா’ படிப்பில் சேரலாம். யு.இ.ஐ., குளோபல் ஸ்கூலை சேர்ந்த நிபுணர்கள் இங்கு பயிற்சி வழங்குகின்றனர். பிளஸ் 2 முடித்தவர்கள் இந்த படிப்பில் சேர முடியும். பட்டப்படிப்பு படிப்பவர்களும் இதில் சேரலாம். வாரத்துக்கு மூன்று நாட்கள் மட்டுமே வகுப்புகள் நடக்கும். ஒவ்வொரு வகுப்பும் ஒன்றரை மணி நேரம். சேவைத்துறையின் பல்வேறு பிரிவுகள் குறித்து இந்த படிப்பில் கற்றுத்தருகின்றனர். தகவல் தொடர்பு திறன்கள் உள்ளிட்ட மென் திறன்களை அதிகரித்துக்கொள்ளவும் கற்றுத்தரப்படுகிறது. பிற படிப்புகளை தொடர்ந்து கொண்டே ஹாஸ்பிடாலிட்டி குறித்து கற்றுக்கொள்ள இது வாய்ப்பளிக்கிறது. கார்பரேட் சூழல் நாளுக்கு நாள் மாறுகிறது. புரபஷனல் உலகுக்கு ஏற்றவாறு வல்லுனராக நடந்து கொள்வது அவசியம். மாணவர்கள் தங்களுக்குள் உள்ள திறன்களை உணரும் வகையில் இந்த படிப்பு அமைந்துள்ளது. பொது நுழைவுத்தேர்வு மற்றும் இன்டர்வியூ அடிப்படையில் இந்த படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இந்த படிப்புக்கான கட்டணம் 12 ஆயிரம் ரூபாய். பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்கு கட்டண சலுகை உண்டு. மாணவிகளுக்கும் கட்டண சலுகை உண்டு. இந்த படிப்பின் காலம் மூன்று மாதங்கள். படிப்பை நிறைவு செய்தவர்களுக்கு தொடக்க சம்பளமாக மாதம் 8 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கிறது.