பள்ளிகளில் பி.டி.ஏ., நிதி வசூலிக்கலாமா?
கோவை: அரசுப்பள்ளி மாணவர்களிடம், பெற்றோர் ஆசிரியர் கழக நிதியை வசூலிக்க கூடாதென உத்தரவிடும் பட்சத்தில், தணிக்கை சிக்கல் ஏற்படாமல் இருக்க, சுற்றறிக்கை வெளியிட வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.கொரோனா தொற்று காரணமாக, 2020-21 கல்வியாண்டு முழுக்க, ஆன்லைன் வகுப்புகள் மூலமாகவே கற்பித்தல் பணிகள் நடந்தன.பல பள்ளிகளில், தொலைபேசி மூலமாகவே, மாணவர்களிடம் அட்மிஷன் உறுதி செய்யப்பட்டது. இதனால், பெற்றோர் ஆசிரியர் கழக (பி.டி.ஏ.,) நிதியாக, வழக்கமாக மாணவர்களிடம் வசூலிக்கப்படும் தலா, 50 ரூபாய், பல பள்ளிகளில் வசூலிக்கப்படவில்லை. இத்தொகையை கொண்டுதான், பள்ளிக்கான கற்றல், கற்பித்தல், நிர்வாக பணிகளுக்கான கூடுதல் செலவினங்கள் மேற்கொள்ளப்படும்.பி.டி.ஏ., நிதி வசூலிக்க வேண்டாமென, கல்வித்துறையும் உத்தரவிடவில்லை. இந்நிலையில், நடப்பு கல்வியாண்டுக்கு, விரைவில் அட்மிஷன் பணிகள் துவங்கப்படவுள்ளன. கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களில், பிளஸ் 1 சேர்க்கைக்கு, மாணவர்களுடன் தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டே, பாடப்பிரிவு உறுதி செய்ய வழிவகை செய்யப்பட்டது.மற்ற வகுப்புகளுக்கு, சேர்க்கை பணிகள் நடக்கும் போது, எந்த கட்டணமும் வசூலிக்க கூடாதென, ஆணையர் நந்தகுமார், முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.இந்த வாய்வழி உத்தரவை, அதிகாரப்பூர்வ அறிவிப்பாக வெளியிட்டால், தணிக்கை சிக்கல் ஏற்படாது என்பது, தலைமையாசிரியர்களின் கருத்து. அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசி ரியர்கள் சிலர் கூறுகையில், &'ஆங்கில வழி கல்வி கட்டண பிரச்னைக்கு, கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு தான், அதிகாரப்பூர்வ உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதுவரை, மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் பெறாத தலைமையாசிரியர்கள், தணிக்கையில் தடையின்மை சான்று பெற முடியாமல் தவித்தனர். தற்போது, அரசுப்பள்ளிகளில் எந்த கட்டணமும், வசூலிக்க கூடாதென தெரிவிக்கப்பட்டுள்ளது. பி.டி.ஏ., நிதியும் இதில் அடங்குமா என தெரிவிக்கவில்லை. இது சார்ந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டால், தணிக்கை சிக்கலுக்கு தீர்வு கிடைக்கும்&' என்றனர்.