உள்ளூர் செய்திகள்

‘கல்வி கிடைத்தால் வறுமை ஒழியும்’

ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி செய்யும் வகையில் டி.ஐ.ஜி. சிவனாண்டி ஜீவாலயா அறக்கட்டளையை உருவாக்கியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் ஒரு கிராமத்தில், ஏழை குடும்பத்தில் பிறந்த மாணவன் ஒருவன், அந்த கிராமத்தில் இருந்த பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வந்தான். தேர்வு நெருங்கியது. பத்தாம் வகுப்பு புத்தகத்திற்காக 50 பைசா கட்டணம் செலுத்த வேண்டும்.  ஏழை குடும்பத்தில் பிறந்த அவனுக்கோ அதற்கும் கூட வசதி இல்லை. இதை அறிந்த அவனது தலைமை ஆசிரியர் அவனுக்காக அந்த 50 பைசாவை செலுத்தினார். அந்த 50 பைசா அவரை இன்று சமுதாயத்தில் பெரிய மனிதனாக்கி இருக்கிறது. அன்று அளவுக்கு அந்த 50 பைசா மட்டும் கிடைக்காமல் போயிருந்தால், அவன் இந்த நிலைமைக்கு வந்திருக்க மாட்டான். அன்று எங்களுக்கு உதவி செய்ய அவ்வளவாக யாரும் இல்லை. ஆனால், இன்று ஏழைகளுக்கு உதவிட நாங்கள் இருக்கிறோம். வெறும் 50 பைசா என் வாழ்க்கையை புரட்டி போட்டபோது, இன்று எல்லா விதத்திலும் உதவிட நாங்கள் இருக்கையில், உங்கள் வாழ்க்கை எதிர்காலத்தில் எப்படி இருக்கும். இந்தியாவின் 110 கோடி மக்கள் தொகையில், 37 கோடி மக்கள் இன்றும் வறுமைக் கோட்டிற்கு கீழே தான் இருக்கின்றனர். ஒருவேளை சாப்பாட்டிற்கே வழி இல்லாத போது, குழந்தைகளை எப்படி படிக்க வைக்க முடியும்? கல்விச் செல்வம் மட்டும் கிடைத்துவிட்டால், வறுமை ஒழிந்து விடும். அதை மனதில் வைத்து தான், ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்த மாணவர்களை தத்தெடுத்து அவர்களுக்கு கல்வியறிவு கொடுக்க முடிவெடுத்தேன். இப்போது 350 குழந்தைகள் கோவையில் மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் இருந்து தத்தெடுக்கப்பட்டுள்ளனர். இதுவரை 35 லட்ச ரூபாய் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. இந்த உதவித் தொகையை திரட்டிய பெருமை கோவை காவல் துறையினரையே சாரும். நிதி வழங்கியவர்களே சம்பந்தப்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளில் பணத்தை செலுத்தி, ரசீதுகளை பெற்றுக் கொண்டனர். இத்திட்டம் தொடர்ந்து செயல்படவே, ‘ஜீவாலயா’ அறக்கட்டளை தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு அனைவரும் முன்வந்து உதவ வேண்டும். இவ்வாறு டி.ஐ.ஜி. சிவனாண்டி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்