எல்.கே.ஜி., விண்ணப்பம்: பெற்றோர் ஆர்வம்!
சென்னை அம்பத்தூர் - திருமங்கலம் சாலையில் முகப்பேரில் டி.ஏ.வி., ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளிகள் தனித்தனியே இயங்கி வருகின்றன. இங்கு நேற்று காலை 9 மணிமுதல் 12 மணிவரை எல்.கே.ஜி., விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டன.பள்ளி நிர்வாகம் சார்பில், விண்ணப்பம் வாங்குவதற்கு அதிகாலையில் வந்துகாத்திருக்க தேவையில்லை. குறிப்பிட்டநேரத்திற்கு வந்தால் நெரிசல் இன்றி விண்ணப்பங்களை பெற்றுச் செல்லலாம் என பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. இருப்பினும், விண்ணப்ப படிவங்களை பெற குழந்தைகளின் பெற் றோர்கள் சிலர் நேற்று முன்தினம் இரவே பள்ளி வளாகத்தின் வெளியே காத்திருந்தனர்.நேற்று காலை, முதல் ஆளாக இருந்து விண்ணப்ப படிவங்களை அவர்கள் வாங்கிச்சென்றனர்.பெண்கள் பள்ளியை காட்டிலும், ஆண்கள் பள்ளியில் விண்ணப்பம் வாங்க குவிந்த பெற்றோர்களின் கூட்டம் அதிகம் இருந்தது. இதையொட்டி, ஜெ.ஜெ.,நகர் போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.