உள்ளூர் செய்திகள்

மாணவர்கள் பஸ்ஸில் ஆபத்தான பயணம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாணவர்கள் பஸ் படியில் தொங்கியபடி ஆபத்தான பயணம் செய்வதை தடுக்க அவர்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 870 அரசுப் பள்ளிகள், 197 தனியார் பள்ளிகள், 91 அரசு உதவிப் பெறும் பள்ளிகள், 17 பகுதி உதவி பெறும் பள்ளிகள் உட்பட 1,175 பள்ளிகள் இயங்கி வருகின்றன.அதே போல், மாவட்டத்தில் ஒரு அரசு மருத்துவக் கல்லுாரி, 4 பொறியியல் கல்லுாரிகள், 4 கலை அறிவியல் கல்லுாரிகள் மற்றும் கல்வியியல் கல்லுாரிகள் உட்பட 25க்கும் மேற்பட்ட கல்லுாரிகள் உள்ளன. பெரும்பாலும் நகரப்பகுதிகளை சார்ந்திருக்கும் இந்த பள்ளி, கல்லுாரிகளுக்கு தினமும் 5 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ, மாணவியர் வருகின்றனர். இதில் பெரும்பாலான மாணவர்கள் அரசு மற்றும் தனியார் பஸ்களில் தான் வருகின்றனர். அதே சமயத்தில் காலை மற்றும் மாலை வேளைகளில் குறிப்பிட்ட சில பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. அதில், பள்ளி கல்லுாரிகளுக்கு செல்லும் மாணவர்கள், அரசு அலுவலகங்களுக்கு செல்வோர், தனியார் நிறுவனங்களுக்கு செல்வோர், பொது மக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஒரே சமயத்தில் பயணிப்பதால் பஸ்சில் கூட்டம் மிகுந்து காணப்படும்.இதனால், காலை மற்றும் மாலை நேரங்களில் மாணவர்கள் முண்டியடித்து பஸ்சில் ஏற வேண்டிய நிலை உள்ளது. பஸ்சில் போதிய இடம் இல்லாததால் மாணவர்கள் படியில் தொங்கியபடி ஆபத்தான நிலையில் நெடுந்துாரம் பயணிக்கின்றனர். தற்போது பள்ளிகள் துவங்கியுள்ள நிலையில் கள்ளக்குறிச்சி நகரப்பகுதியிலிருந்து தினமும் கச்சிராயபாளையம், சூளாங்குறிச்சி, வீரசோழபுரம், கொட்டையூர், தண்டலை, மாடூர், பெருவங்கூர், ஒகையூர், அசகளத்துார், விருகாவூர் உள்ளிட்ட கிராமப்பகுதிகளுக்கு செல்லும் அரசு, தனியார் பஸ்களில் தினசரி மாணவர்கள் படியில் தொங்கியபடி, சில நேரங்களில் மேற்கூரையில் அமர்ந்தும் ஆபத்தான நிலையில் பயணம் செய்கின்றனர்.டிரைவர்கள் அவசரத்திற்கு பிரேக் அடித்தாலோ அல்லது அதிவேகமாக செல்லும் மற்ற வாகனங்கள் உரசி சென்றாலோ படியில் தொங்கியபடி பயணிக்கும் மாணவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. பஸ்சில் இடம் இருந்தும் சில மாணவர்கள் ஆபத்தை உணராமல் தினசரி படியில் பயணிப்பதும் தொடர்கிறது. இதனை போலீசாரோ, போக்குவரத்துறை அதிகாரிகளோ கண்டுகொள்வதில்லை. இதனால் பஸ் படியில் பயணம் செய்வது அதிகரித்து வருகிறது. எனவே, பள்ளி கல்லுாரி மாணவர்களின் நலன் கருதி காலை மற்றும் மாலை வேளைகளில் கிராமப்புறங்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போல், பஸ் படியில் தொங்கி பயணிப்பதை தடுக்க வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதுடன், மாணவர்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்