ராமாயணம் சொற்பொழிவு: மாணவர் சாதனை
உடுமலை: உடுமலையில், ராமாயண கதை கூறி வரலாற்று சாதனை படைத்துள்ளார் மாணவர் சவுரவ் சிவகுமார்.உடுமலை, ஜோதிநகர் பகுதியைச்சேர்ந்த சிவகுமார், மலர்விழி தம்பதியினரின் மகன் சவுரவ் சிவக்குமார். உடுமலை ஆர்.ஜி.எம்.,மேல்நிலைப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.மாணவரின் சிறுவயது முதலான ஆர்வத்தால், தற்போது ராமாயணக்கதைகளை குறுகிய காலநேரத்தில் சொற்பொழிவாற்றி இந்தியா புக் ஆப் ரெக்கார்ட் வரலாற்று புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.பெற்றோர் கூறியதாவது: சவுரவ்விற்கு சிறுவயது முதல் ஆன்மிகத்தில் அதிக விருப்பம் உள்ளது. சொற்பொழிவாற்றுவது, மந்திரங்கள் கூறுவதிலும் நாட்டம் அதிகம். அவரின் ஆன்மிக எண்ணத்தை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ராமாயணத்தில் உள்ள பாலகாண்டம் முதல் யுத்தகாண்டம் வரை உள்ள முழு கதை மற்றும் ராமநாம மந்திரங்களையும், ஒரு மணிநேரம் 37 நிமிடம் 40 வினாடிகளில் சொற்பொழிவாற்றினார். 40 நாட்களில் இதற்கான பயிற்சி எடுக்கப்பட்டது. ராமானுஜர் ஜெயந்தியையொட்டி ஏப்., மாதம் இந்நிகழ்ச்சியை அரங்கேற்றினோம். இதற்கு தற்போது, இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் விருது வழங்கப்பட்டுள்ளது. இதே சாதனைக்கு இதற்கு முன்பு, கலாம் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் விருதும் வழங்கப்பட்டது. தினமலரின் ஆன்மிக மலரை தொடர்ந்து படித்ததும், இந்த முயற்சிக்கான முக்கிய துாண்டுகோலாக உள்ளது. அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க வேண்டுமென்பதை முக்கிய லட்சியமாக கொண்டு, பிரதமருக்கு தொடர்ந்து கடிதம் எழுதி அனுப்பி வருகிறார்.இவ்வாறு கூறினர்.