மாணவர்களுக்கு முன்னாள் நீதிபதி அறிவுரை
மைசூரு: மனிதநேயத்தை கடைப்பிடிக்கும் போது தான், நல்ல குடிமகனாக உருவாக முடியும், என லோக் ஆயுக்தா முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே தெரிவித்தார்.மைசூரு ஜெயலட்சுமிபுரத்தில் நடந்த சட்டம் ஒழுங்கு மற்றும் ஊழல் ஒழிப்பு என்ற கருத்தரங்கில் லோக் ஆயுக்தா முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே பங்கேற்று பேசியதாவது:மாணவர்கள், தங்கள் வாழ்க்கையில் திருப்தி, மனிதநேயத்தை கடைப்பிடிக்க வேண்டும். திருப்தி இல்லாவிட்டால் பேராசை பெருகும். பேராசை சமூக சமத்துவமின்மைக்கு வழிவகுக்கிறது. மனிதநேயத்தை கடைப்பிடிக்கும் போது தான், நல்ல குடிமகனாக உருவாக முடியும். ஆசிரியர்கள் மதிப்புமிக்க போதனை செய்கின்றனர். அதை ஏற்று நல்வழியில் நடப்பது மாணவர்களின் பொறுப்பு. இன்றைய சமூகம், செல்வத்தையும், அதிகாரத்தையும் வணங்குவது தெரிகிறது. இதனால், நாட்டை வளர்ச்சியடைய செய்ய முடியாது. ஒவ்வொருவரும் சட்டத்திற்கு உட்பட்டு செயல்பட வேண்டும். மற்றவர்களின் உயிருக்கு தீங்கு விளைவிப்பது சரி அல்ல. ஆட்சியில் அநீதி இழைக்கப்பட்டால், அதற்கான இழப்பீட்டை லோக் ஆயுக்தா அளிக்கும். அநீதிக்கு எதிராக பொது மக்கள் குரல் கொடுத்து, லோக் ஆயுக்தாவுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.நம் பணியை சிறப்பாக செய்யும் போது கிடைக்கும் திருப்தி வேறெதிலும் கிடைக்காது. ஒவ்வொரு அரசியல்வாதியும் பொது மக்களின் சேவகன் என்று நினைத்து நேர்மையுடனும், அர்ப்பணிப்புடனும் பணியாற்றும் போது தான் சமத்துவ சமுதாயம் உருவாகும். நாட்டில் அதிக நீதிமன்றங்கள் உள்ளன. ஆனால், வழக்குகள் அதிகமாக இருப்பதால், தீர்ப்புகள் தாமதமாகின்றன. 1973ல், 500 வழக்குகள் நிலுவையில் இருந்தன. இப்போது, 5 லட்சமாக அதிகரித்து உள்ளன.இவ்வாறு அவர் பேசினார்.