கட்டாய கல்வி: கட்டணம் பாக்கி
சென்னை: கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் மாணவர்களை சேர்த்த 475 தனியார் பள்ளிகளுக்கு கட்டண பாக்கி உள்ளதாக கூறப்பட்டுள்ளது.தமிழகத்தில் இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் சுயநிதி பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் எல்.கே.ஜி., அல்லது ஒன்றாம் வகுப்பில் இலவசமாக மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இந்த மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை எட்டாம் வகுப்பு வரை அரசே வழங்கி வருகிறது. இந்நிலையில் 2021 - 22ம் கல்வி ஆண்டுக்கான கட்டணத்தை பள்ளிகளுக்கு வழங்க 364 கோடி ரூபாய் ஒதுக்கி கடந்த பிப்ரவரியில் பள்ளிக் கல்வி செயலகம் அரசாணை பிறப்பித்தது. முதல் கட்டமாக 6,204 பள்ளிகளுக்கும்; பின் 446 மற்றும் 236 பள்ளிகளுக்கும் கட்டணத் தொகை வழங்கப்பட்டது. இன்னும் 475 பள்ளிகளுக்கு கட்டணம் வழங்கப்படவில்லை. ஒருங்கிணைந்த கல்வி திட்டமான சமக்ர சிக் ஷா இயக்குனரகத்தில் கட்டணம் வழங்க தாமதம் செய்யப்படுவதாக தனியார் பள்ளி தாளாளர் நல சங்கத்தினர் புகார் தெரிவித்து உள்ளனர்.