சுகாதார ஆய்வாளர் பணியிடங்கள் குறைப்பு
மதுரை: மக்கள் தொகை, தொற்று நோய்களின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் சுகாதார ஆய்வாளர்களின் (எச்.ஐ.,) பணியிடங்களை நான்கில் ஒரு பங்காக தமிழக அரசு குறைத்துள்ளது. அரசு பயிற்சி நிலையங்களில் இதற்கான பயிற்சியும் நிரந்தரமாக நிறுத்தப்பட்டுள்ளது.முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு முன் வரை, அரசு மருத்துவக் கல்லுாரிகள், அந்தந்த மாவட்டங்களில் உள்ள சுகாதார துணை இயக்குநர் வளாகத்தில் உள்ள பயிற்சி நிலையங்கள் மூலம் சுகாதார ஆய்வாளருக்கான இரண்டாண்டு கால பயிற்சி அளிக்கப்பட்டது.பிளஸ் 2 அறிவியல் பாடத்தில் தேர்ச்சி பெற்றவர்கள் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பெயர்களை பதிவு செய்திருந்தால் பதிவு மூப்பு மற்றும் விருப்பத்தின் அடிப்படையில் சுகாதார ஆய்வாளர் பயிற்சிக்கு அழைக்கப்படுவர். விருப்பமுள்ளவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் சுகாதார பயிற்சி நிலையங்களில் இரண்டாண்டுகளுக்கு ஊக்கத்தொகையுடன் கூடிய எச்.ஐ., பயிற்சி அரசால் அளிக்கப்படும். பயிற்சிக்கு பின் எச்.ஐ.,ஆக அரசு வேலையில் சேர்த்துக் கொள்ளப்படுவர்.ஜெயலலிதா ஆட்சிக்குப்பின், அரசு மருத்துவக் கல்லுாரிகளிலும் அரசு பயிற்சி நிலையங்களில் இந்த பயிற்சி நிரந்தரமாக நிறுத்தப்பட்டது. மாவட்டத்திற்கு ஒன்று அல்லது இரண்டு தனியார் பயிற்சி நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. தமிழகத்தில் 50க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் இரண்டாண்டு கால கட்டணத்துடன் கூடிய சுகாதார ஆய்வாளர் பயிற்சி அளிக்கின்றன. தற்போது 10ஆயிரம் பேர் படித்து வேலைக்காக காத்திருக்கின்றனர். 4000 காலிப் பணியிடங்கள் உள்ளன.பணியிடங்கள் சுருங்கினதமிழகத்தில் சுகாதார பணியாளருக்கு 13ஆயிரம் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. தொற்று நோய்கள் பரவும் போது நகரம், கிராமப்புறங்களில் சுகாதாரப் பணிகளை மேற்கொண்டு நோய்கள் மேலும் பரவாமல் தடுப்பது இவர்களின் பணி. முன்பு இருந்த மக்கள் தொகையுடன் ஒப்பிடும் போது 100 சதவீதம் அதிகரித்துவிட்டது. தொற்றுநோய்கள் எப்போது பரவும் என சொல்லமுடியாத அளவு காலநிலை மாறிவிட்டது. கொரோனா தொற்றின் போது இவர்களது பணி மகத்தானது. பெருகிவரும் மக்கள் தொகை மற்றும் தொற்றுநோய்களின் பரவலுக்கு ஏற்ப ஆய்வாளர் பணியிடம் இருமடங்காக அதிகரித்திருக்க வேண்டும். தற்போது பணியிடம் நான்கில் ஒரு பங்காக குறைந்து விட்டது. 4000 பேர் வரையே பணியாற்றுகின்றனர். 5000 குடும்பங்களுக்கு ஒருவர் என்றிருந்தநிலையில் தற்போது 50ஆயிரம் குடும்பங்களுக்கு ஒருவராக எச்.ஐ., பணியிடம் சுருக்கப்பட்டு விட்டது.டாக்டர், நர்ஸ், மருந்தாளுனர்களுக்கான பணியிடங்களை அதிகரித்தால் மட்டும் போதுமா. சுகாதார ஆய்வாளருக்கான பணியிடத்தையும் அதிகரித்தால் தானே சுகாதாரத்தில் சமநிலை நிலவும். அரசு மீண்டும் மருத்துவக்கல்லுாரி மற்றும் பயிற்சி நிலையங்களில் பயிற்சி அளிக்கும் முறையை கொண்டு வருவதோடு, பணியிடங்களின் எண்ணிக்கையையும் தமிழக அரசு அதிகரிக்க வேண்டும்.