உச்ச நீதிமன்றத்திலும் ஏ.ஐ., தொழில்நுட்பம்!
சென்னை: செயற்கை நுண்ணறிவு போன்ற புதிய தொழில்நுட்பங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதே, இப்போதுள்ள பெரிய சவால் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கூறினார்.சென்னை ஐ.ஐ.டி.,யின், 60வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. பி.டெக்., எம்.டெக்., எம்.எஸ்சி., எம்.ஏ., எம்.பி.ஏ., எம்.எஸ்., பிஎச்.டி., படிப்புகள் முடித்த 2,573 மாணவ, மாணவியருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. தலைமை விருந்தினராக பங்கேற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த சாய் கவுதம், நேகா சுவாமிநாதன் சடாக்ஷி சாரங்கி, பிரகலாத் உள்ளிட்ட, 50க்கும் அதிகமான மாணவ, மாணவியருக்கு பரிசுகளையும், பட்டங்களையும் வழங்கினார்.பின், அவர் பேசியதாவது:கடந்த 64 ஆண்டுகளில், சென்னை ஐ.ஐ.டி., மாணவர்களின் ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பங்கள், இந்தியாவின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்துள்ளன. சென்னை ஐ.ஐ.டி., போன்ற கல்வி நிறுவனங்கள், மக்களிடம் அறிவியல் அணுகுமுறையை ஏற்படுத்தியதால், நம் சமூகத்தில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இன்று பட்டம் பெற்ற ஆயிரக்கணக்கான மாணவர்களின் கண்களில், நாட்டின் பிரகாசமான எதிர்காலத்தை பார்க்க முடிகிறது. சென்னை ஐ.ஐ.டி.,யில் படிப்பை முடித்து சென்றாலும், அதன் தாக்கம் எப்போதும் மாணவர்களிடம் இருக்கும்.இங்கு கற்றவையும், பெற்றவையும் மாணவர்களை வழிநடத்தும்; ஊக்குவிக்கும். இங்கு பட்டம் பெற்ற மாணவர்களின் கல்விக்காக தியாகம் செய்த, அவர்களின் பெற்றோரை, இந்த நேரத்தில் பாராட்டுகிறேன். தொழில்நுட்பங்கள், அனைத்து துறைகளையும் வளர்ச்சி பாதையில் அழைத்துச் செல்கின்றன. கொரோனா பேரிடரின்போது, தொழில்நுட்பம் தான் கை கொடுத்தது. நீதிமன்றங்களில் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக வழக்கு விசாரணைகள் நடந்தன. பல லட்சம் வழக்குகளை முடித்து வைக்க, தொழில்நுட்பம் உதவியது. எந்த வேறுபாடும் இல்லாமல் கலந்து பழக, சமூக ஊடகங்கள் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளன. விரும்பியதை கற்றுக் கொள்ளவும் இணையதளங்கள் உதவுகின்றன.வருங்கால மனித சமுதாய வளர்ச்சியில், தொழில்நுட்பங்களே முக்கிய பங்கு வகிக்கும். புதிய நவீன தொழில்நுட்பங்கள், அடித்தட்டு மக்களுக்கும் பயனளிக்க வேண்டும். இப்போது செயற்கை நுண்ணறிவான ஏ.ஐ., தொழில்நுட்பங்கள் வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளன. சட்டத் துறையிலும், உச்ச நீதிமன்றத்திலும் அதை பயன்படுத்த இருக்கிறோம். ஏ.ஐ., போன்ற புதிய தொழில்நுட்பங்கள், மக்களுக்கு சாதகமாக உள்ளன. ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, போலியாக மனித முகங்களை உருவாக்குவது, பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. ஏ.ஐ., போன்ற தொழில்நுட்பங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதே, மாணவர்கள் முன் உள்ள பெரிய சவால்.இவ்வாறு அவர் பேசினார்.சென்னை ஐ.ஐ.டி., நிர்வாக குழு தலைவர் பவன் கோயங்கா, இயக்குனர் காமகோடி உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில், 453 பேர் பிஎச்.டி., பட்டமும், 407 பேர் பி.டெக்., எம்.டெக்., என இரட்டை பட்டமும் பெற்றனர். பட்டம் பெற்ற மாணவர்கள், அவரவர் மாநிலத்தின் பாரம்பரிய ஆடை அணிந்திருந்தனர்.