தனியார் பள்ளியிலும் புத்தகமில்லா தினம்
புதுச்சேரி: புத்தகமில்லா தினம், தனியார் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும், என கவர்னர் தமிழிசை கூறினார்.மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம், 2020ம் ஆண்டு வெளியிட்ட கல்விக் கொள்கையில் புத்தகப்பை இல்லா தினம் கடைப்பிடிக்க அறிவுறுத்தியது. இதன்படி, புதுச்சேரி மாநிலத்தில் மாதத்தின் கடைசி வேலை நாளில் புத்தகப் பை இல்லாத தினத்தை கடைப்பிடிக்க கல்வித்துறை உத்தரவிட்டது. இதன்படி, ஜூலை மாதத்தின் கடைசி வேலை நாளான நேற்று அரசு பள்ளி மாணவர்கள் புத்தகப்பை இன்றி பள்ளிகளுக்கு சென்றனர். அங்கு அவர்களுக்கு, விளையாட்டு, கலை நிகழ்ச்சி, வினாடி வினா, விவாத நிகழ்வு உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டது.குருசுகுப்பம் என்.கே.சி., அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு செய்த கவர்னர் தமிழிசை, மாணவியருடன் கலந்துரையாடி புத்தகமில்லா நாளின் அனுபவங்களைக் கேட்டறிந்தார். மாணவியர் இட்ட கோலங்களை பார்வையிட்டு பாராட்டினார். பின், மாணவியருடன் கைப்பந்து விளையாடினார். தொடர்ந்து வண்ணம் பூசுதல் பற்றிய செய்முறையை மாணவியருக்கு செய்து காண்பித்தார். காகிதப்பை தயாரிப்பு பற்றி மாணவியருக்கு பயிற்சி அளிக்கப்பட்டதைப் பாராட்டினார். அப்போது, அமைச்சர் லட்சுமி நாராயணன், கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி, ஆசிரியர்கள் உடனிருந்தனர். தொடர்ந்து, சாரம் அரசு தொடக்கப் பள்ளியை ஆய்வு செய்த கவர்னர், மாணவர்களுடன் நடனமாடி உற்சாகப்படுத்தினார். பின், மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கினார். அப்போது ஜான்குமார் எம்.எல்.ஏ., உடனிருந்தார்.பின், கவர்னர் கூறியதாவது:ஒவ்வொரு மாதமும் கடைசி வேலை நாள் பள்ளிகளில் புத்தகப்பை இல்லாத நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் விளையாட்டு மற்றும் கைவினைப் பயிற்சி போன்ற ஆக்கபூர்வமான நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. இதனால், மாணவர்களால் திறம்பட செயல்பட முடியும். இதனை மாணவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். இத்திட்டம், தனியார் பள்ளிகளுக்கும் விரிவுப்படுத்தப்பட உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.