உள்ளூர் செய்திகள்

சத்துணவில் தக்காளிக்கு பதில் புளி!

பெலகாவி: காய்கறிகள் விலை உயர்வால், மாணவர்களின் மதிய உணவு திட்டத்தின் கீழ் அரசு, அரசு உதவி பெறும் மாணவ - மாணவியருக்கு தயாரிக்கப்படும் குழம்பில் தக்காளிக்கு பதலாக, புளி பயன்படுத்தப்படுகிறது.பிரதான் மந்திரி போஷான் சக்தி நிர்மான் திட்டத்தின் கீழ், அரசு, அரசு உதவி பெறும் மாணவ - மாணவியருக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. பெலகாவி மாவட்டத்தில் உள்ள 4,006 பள்ளிகளில், ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை 6 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். சில பள்ளிகளில் மதிய உணவு தயாரிக்கப்படுகிறது; சில பள்ளிகளுக்கு அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் தயாரித்து வழங்குகின்றன. இந்நிலையில், சமையலுக்கு தேவையான காய்கறிகள் உட்பட பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதிலும் தக்காளி விலை தாறுமாறாக உள்ளது. இதனால், பெலகாவியின் விஸ்வேஸ்வரய்யா நகரில் உள்ள அரசு பள்ளி மாணவ - மாணவியருக்கு தயாரிக்கப்படும் குழம்பில் தக்காளிக்கு பதிலாக, புளி பயன்படுத்தப்படுகிறது.மதிய உணவு திட்ட அதிகாரிகள் கூறியதாவது:வாரத்தில் நான்கு நாட்கள் மாணவர்களுக்கு சாதம், குழம்பு; புதன்கிழமை புலாவ், சனிக்கிழமை கோதுமை உப்புமா கொடுக்கிறோம். தக்காளி, ஜாதிக்காய், பீட்ரூட், உருளைக்கிழங்கு, பூசணி போன்ற காய்கறிகளை சமையலுக்கு பயன்படுத்துகிறோம். முன்னர், குழம்பு செய்வதற்காக, 150 முதல் 200 கிலோ தக்காளியை பயன்படுத்தினோம். இப்போது 25 முதல் 30 கிலோ வரை மட்டுமே பயன்படுத்துகிறோம். ஆனால் சந்தையில் கிலோ தக்காளி 200 ரூபாய் வரை விற்கப்படுகிறது. மற்ற காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது. இதனால், தக்காளிக்கு பதிலாக புளி பயன்படுத்துகிறோம்.வழக்கமாக, ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் ஒரு மாணவருக்கு, 50 கிராம் காய்கறியும்; ஆறு முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு 75 கிராம் காய்கறியும் வழங்கப்பட வேண்டும். சமையலுக்கு பயன்படுத்தப்படும் காய்கறிகள், மசாலா பொருட்களுக்கு, ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ - மாணவியருக்கு 1.93 ரூபாயும்; ஆறு முதல் 10ம் வகுப்பு வரை 2.83 ரூபாய் மானியமாக அரசு வழங்குகிறது. தற்போதைய விலைவாசி உயர்வில் அரசு தரும் மானியத்தில் மதிய உணவு தயாரிப்பது சிரமமாகி வருகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.காய்கறிகள் விலை உயர்வால் மதிய உணவு திட்டத்துக்கு பாதிப்பு இருப்பது உண்மை தான். சில இடங்களில் தக்காளிக்கு பதில் புளி பயன்படுத்தப்படுகிறது என பெலகாவி கல்வி அதிகாரி, லட்சுமணராவ் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்