மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி
கோவை: அரசுப்பள்ளி மாணவர்களுக்கு, மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி நடத்தி, பரிசு பெற்றவர்கள் பட்டியல் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.ஒருங்கிணைந்த கல்வி சார்பில், தென்னிந்திய அளவிலான அறிவியல் கண்காட்சி ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இதில், எட்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பங்கேற்க அனுமதிக்கப்படுகிறது.மாவட்ட, மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள், தென்னிந்திய அறிவியல் போட்டியில் பங்கேற்பர். இந்தாண்டுக்கான போட்டி, ஜனவரி மூன்றாவது வாரத்தில், ஆந்திரபிரதேசத்தில் நடக்கிறது.இதில், தமிழக மாணவர்கள் பங்கேற்கும் வகையில், மாவட்ட அளவிலான கண்காட்சி போட்டி, விரைவில் நடத்தி, முதலிரு இடங்களை பிடித்தவர்கள் பட்டியல் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.இயற்பியல், வேதியியல், கணிதம் உள்ளிட்ட ஒன்பது பாடங்களின் கீழ், படைப்புகளை தயாரிக்கலாம். இதில், தலா ஒரு மாணவர், ஆசிரியர் இணைந்தும், இரு மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியர் இணைந்தும் போட்டியில் பங்கேற்கலாம். ஆசிரியர்கள் தனியாகவும் பங்கேற்கலாம். அரையாண்டு விடுமுறையில், போட்டியில் பங்கேற்க ஆயத்தப்படுத்துமாறு, தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.