அரசுப் பள்ளிகளுக்கு வாய்ப்பு மறுப்பு
தங்கவயல்: தங்கவயலில் அரசு சார்பில் நடந்த குடியரசு தின விழாவில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு எதிலும் முக்கியத்துவம் வழங்கப்படவில்லை.ராபர்ட் சன் பேட்டை நகராட்சி ஸ்டேடியத்தில் குடியரசு தின விழா நேற்று, தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா தலைமையில் நடந்தது எஸ்.பி., சாந்தராஜு தேசியக்கொடியை ஏற்றிவைத்தார்.தங்கவயல் தாசில்தார் நாகவேணி, நகராட்சி ஆணையர் பவன் குமார், தாலுகா பஞ்சாயத்து தலைமை அதிகாரி மஞ்சுநாத் ஹர்தி, வட்டார கல்வித்துறை அதிகாரி முனிவெங்கட ராமாச்சாரி ஆகியோரும் விழாவில் பங்கேற்றனர்.வழக்கம்போல போலீசார், ஊர்க்காவல் படை, தேசிய மாணவர் படை, சாரணர் - சாரணியர் ஆகியோரின் அணிவகுப்பு நிகழ்ச்சியும் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடந்தன. அரசு சார்பில் நடந்த விழாவில் தனியார் கல்வி நிறுவன மாணவர்களுக்குத் தான் வாய்ப்பு வழங்கப்பட்டது.தேசிய கீதம், மாநில கீதம் பாடுவது, கலை நிகழ்ச்சிகள் அனைத்தையுமே தனியார் பள்ளிகளின் மாணவர்கள் தான் பங்கேற்றனர். அரசுப் பள்ளி மாணவர்களை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. இதனால் அரசுப் பள்ளிகளில் படித்து வரும் மாணவர்களின் பெற்றோர், உறவினர்கள் அதிருப்தி அடைந்தனர்.தவிர எப்போதுமே குடியரசு தின விழாவின் நிகழ்ச்சிகளை காண கூட்டம் அதிகமாக இருக்கும். ஆனால், இவ்வாண்டு நாற்காலிகள் காலியாகவே இருந்தன. அணிவகுப்பில் பங்கேற்ற தேசிய மாணவர் படை மாணவி ஒருவர் திடீரென மயங்கி விழுந்தார். தயார் நிலையில் இருக்க வேண்டிய ஆம்புலன்ஸ் அங்கு இல்லை. போலீஸ் வேனில் அந்த மாணவி அழைத்துச் செல்லப்பட்டார். அதன் பின்னரே ஆம்புலன்ஸ் வந்தது.