காய்கறி சாகுபடிக்கு புதிய தொழில்நுட்பம்
பொள்ளாச்சி: கோவை, தமிழ்நாடு வேளாண் கல்லுாரி, நான்காம் ஆண்டு மாணவியர், கிராம தங்கல் திட்டத்தின் கீழ், ஆழியாறில் முகாமிட்டுள்ளனர். அவர்கள், விவசாயிகளுக்கு வேளாண் குறித்த பயிற்சியை அளித்தும் வருகின்றனர்.பல்கலைக் கழகம் விதை மற்றும் அறிவியல் துறையில் இருந்து, நியூட்ரிவெஜ் விதை கியூப் எனும் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தினர். அதன் வாயிலாக, வீட்டுத் தோட்டம், மாடித் தோட்டம் மற்றும் குறைந்த பரப்பில் வீட்டிற்கு தேவையான காய்கறிகளை உற்பத்தி செய்ய முடியும் என தெரிவித்தனர். இதுகுறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்க பயிற்சி அளித்தனர்.மாணவியர் கூறியதாவது: விதை கியூப், சிறிய கனச்சதுர வடிவத்தில் கோகோ பித் கொண்டு முழுமையாக சூழப்பட்டுள்ளது. இதில், ஏழு வகையான காய்கறி விதைகள் அடங்கியுள்ளன. குறிப்பாக, தக்காளி, வெண்டை, கத்தரிக்காய் ஆகிய காய்கறி விதைகள் உள்ளன.இதன் வாயிலாக விதைக்கும்போது, குறைந்த நாட்களில் முளைப்பு திறன் கிடைக்கும். உரத்திற்கான செலவு குறைகிறது. வீட்டில் உள்ள குழந்தைகளும் காய்கறிகளை எளிதாக உற்பத்தி செய்து கொள்ள முடியும். இந்த விதை கியூப், பல்கலைக்கழகம் விதை மற்றும் அறிவியல் துறை வாயிலாக விற்பனை செய்யப்படுகிறது.இவ்வாறு, கூறினர்.