இன்ஜி., கல்லுாரிக்கு தேர்வில் விலக்கு
சென்னை: அண்ணா பல்கலையின் கீழ் இயங்கும் தன்னாட்சி பெற்ற இன்ஜினியரிங் கல்லுாரிகளின் கல்வி விதிமுறைகள் குறித்து, சமீபத்தில் நடந்த சிண்டிகேட் கூட்டத்தில், பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டு உள்ளன. அதன்படி, தொழில்நுட்பக் கல்வியின் தரம் குறித்து பல்வேறு பரிந்துரைகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.முக்கியமாக, ஒவ்வொரு செமஸ்டருக்கும், செய்முறை அல்லாத ஒரு, தியரி பாடத்தின் வினாக்களை வடிவமைக்கவும், விடைத்தாள்களை திருத்தவும், தன்னாட்சி கல்வி நிறுவனத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.தேசிய அளவில் சிறந்த கல்வி நிறுவனங்களின் தரவரிசையில், 20 இடங்களுக்குள் உள்ள தன்னாட்சி நிறுவனத்திற்கு, பல்கலை தேர்வு நடத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தரமற்ற நிறுவனங்கள் பற்றி, பல்கலை மானியக் குழுவிற்கு தெரிவிக்கவும், தன்னாட்சி கல்லுாரிகளின் தரத்தை உயர்த்தவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.மேலும், தரமான தன்னாட்சி நிறுவனங்களை மட்டுமே, பல்கலையுடன் இணைக்கும் வகையில் உரிய திருத்தங்களை மேற்கொள்ளவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ஒரு கல்வியாண்டில், ஒரு மாணவரிடம் இருந்து 2000 ரூபாய் கல்வி நிர்வாகக் கட்டணமாக வசூலிப்பது குறித்த பரிந்துரையை, அடுத்த சிண்டிகேட் கூட்டத்தில் முன்வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.சென்னை ராஜலட்சுமி இன்ஜினியரிங் கல்லுாரியின் தன்னாட்சி அதிகாரம் நீட்டிப்பது குறித்த பரிந்துரையில், பல்கலை மானியக் குழுவின் ஒப்புதலை பெற்று நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.