மின்னணு விளையாட்டுகள் தமிழகத்திற்கு சாத்தியமா
மதுரை: முதல்வர் கோப்பைக்கான (சி.எம்.ட்ராபி) விளையாட்டுப்போட்டிகளில் இந்தாண்டு முதல் மின்னணு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது மாணவர்களை மேலும் மேலும் ஆன்லைன் விளையாட்டுக்கும் அலைபேசிக்கும் அடிமையாக்கும் முயற்சி. முதல்வர் கோப்பை போட்டிக்காக பள்ளிக்கல்வித்துறை சார்பில் குறுவட்ட போட்டிகளை சீக்கிரமாக நடத்தச் சொல்லி நெருக்கடி கொடுப்பதாக அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளின் உடற்கல்வி ஆசிரியர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர்.மின்னணு விளையாட்டுகள் குறித்து எங்களுக்கு தகவலே தெரியவில்லை எனவும் தெரிவித்தனர் உடற்கல்வி ஆசிரியர்கள்.இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: களத்தில் நின்று விளையாடும் போது உடல்ரீதியாக மாணவர்கள் வலுபெறுவர். வெற்றி, தோல்விக்கு ஏற்ப மனமும் பக்குவப்படும்.மின்னணு விளையாட்டுகளுக்கு ஏற்கனவே நிறைய மாணவர்கள் அடிமையாகி படிப்பை கைவிடும் அவலம் உள்ளது. இந்த நிலையில் மின்னணு விளையாட்டுகளையும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.இது மாணவர்களின் உடல்நலனை இன்னும் பாதிக்கும் என்பதில் சந்தேகமில்லை. விளையாட்டு, ஆடுகளம், உடற்பயிற்சி என்பதே இனிவரும் அடுத்த தலைமுறைக்கு தெரியாமல் போய்விடும்.ஜூனில் தான் பள்ளிகள் திறக்கப்பட்டது. அதற்குள் ஜூலையில் பள்ளிக்கல்வித்துறையின் குறுவட்ட விளையாட்டு போட்டிகளை நடத்தச் சொல்லி கட்டாயப்படுத்துகின்றனர். விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவர்கள் அரியர் வைத்திருந்தால் இப்போது தான் தேர்வெழுதியிருப்பர்.அதன்பின்பே பள்ளி சேர்க்கை நடைபெறும். அவர்களை விளையாட்டில் சேர்க்க முடியவில்லை. மாணவர்களை விளையாட்டுக்கு தயார் செய்ய நேரமில்லாத நிலையில் குறுவட்ட போட்டிகளை முடித்து கொடுத்தால் தான் எங்களை வைத்து சி.எம். ட்ராபி நடத்தமுடியும் என்பதால் நெருக்குகின்றனர்.கைக்காசு செலவாகிறது சி.எம். ட்ராபிக்கான மாவட்ட அளவில் போட்டிகள் நடத்தும் போது மாணவர்களை எங்களது சொந்தசெலவில் தான் போட்டி நடக்கும் இடங்களுக்கு அழைத்துச் செல்கிறோம்.அதிகளவில் மாணவர்கள் சேர்க்கையை காட்டுமாறு கட்டாயப்படுத்தப்படுவதால் அத்தனை மாணவர்களையும் அழைத்துச் செல்வது சிரமமாக உள்ளது. மாவட்ட போட்டிகளுக்கு அழைத்து வர தனியாக நிதி வழங்க வேண்டும்.குறுவட்டம் முதல் மாநிலப் போட்டி வரையான பள்ளிக்கல்வித்துறை விளையாட்டுகளுக்கு ஆண்டுக்கு மொத்தமே ரூ.12 கோடி தான் வழங்கப்படுகிறது. மாநில அளவில் ஜெயித்தால் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுத்தொகை பெரிதாக இல்லை.பெயருக்கு நடத்தப்படும் சி.எம்.ட்ராபி மாநில விளையாட்டுக்கு முதல் பரிசுக்கு ரூ.ஒரு லட்சம் தருவது நியாயமில்லை. திறமையான மாணவர்கள் பள்ளியிலிருந்தே உருவாகின்றனர் என்பதால் பள்ளிக்கல்வித்துறை விளையாட்டுக்கும் மாநில அளவில் ரூ. ஒரு லட்சம், ரூ. 75 ஆயிரம், ரூ. 50 ஆயிரம் என வழங்க வேண்டும் என்றனர்.