தேர்வு வழிகாட்டுதல் பயிற்சி முகாம்
புதுச்சேரி: வம்பாகீரப்பாளையம், தட்சிணாமூர்த்தி அரசு உயர்நிலைப் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி., பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கான தேர்வு வழிகாட்டுதல் பயிற்சி முகாம் நடந்தது.பள்ளி தலைமையாசிரியர் வீரக்குமார் தலைமை தாங்கினார். ஆங்கில ஆசிரியர் அஷ்ரப் வரவேற்றார். ஆசிரியர்கள் இக்பால் பாஷா, பெனடிக் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக உழவர்கரை தாசில்தார் செந்தில்குமார் கலந்து கொண்டு பயிற்சி முகாமை துவக்கி வைத்து, எஸ்.எஸ்.எல்.சி., பொதுத் தேர்வு மற்றும் மத்திய, மாநில அரசுகள் உயர் பதவிகளுக்காக நடத்துகின்ற போட்டித் தேர்வுகளை தன்னம்பிக்கையோடு எழுதும் முறைகள் குறித்து பேசினார்.எழுத்தாளர் அரிமதி இளம்பரிதி, தலைமைப் பண்புகளை வளர்த்துக் கொள்ளும் முறைகள், படைப்புத் திறன்களின் முக்கியத்தும், கூடுதல் மொழித் திறன், உயர் கல்வி, நினைவாற்றல் மற்றும் தொழில் நுட்ப மேலாண்மை குறித்து பேசினார். தமிழ் ஆசிரியை பெபினா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். தொடர்ந்து மாணவர்களின் கலந்துரையாடல் நடந்தது. விழாவில் ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.அறிவியல் ஆசிரியர் தேவி நன்றி கூறினார்.