ஜே.இ.இ., தரவரிசை பட்டியல் போலி
சென்னை: 'இணையதளத்தில் நேற்று வெளியான, ஜே.இ.இ., முதன்மை தேர்வு தரவரிசை பட்டியல் போலியானது' என, ரூர்க்கி ஐ.ஐ.டி., தெரிவித்துள்ளது.ஜே.இ.இ., முதன்மை தேர்வு தரவரிசை என, இணையதளத்தில் நேற்று ஒரு பட்டியல் வெளியானது. இது குழப்பத்தை ஏற்படுத்தவே என ரூர்க்கி ஐ.ஐ.டி., கல்வி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து, தேர்வை நடத்திய உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள, ரூர்க்கி ஐ.ஐ.டி., கல்வி நிறுவனம் அளித்த விளக்கம்:இணையதளத்தில் பரவிய தரவுகள் முறையாக ஆய்வு செய்யப்பட்டன. அதற்கும் உண்மையான தரவரிசை பட்டியலுக்கும், எந்தவித ஒற்றுமையும் இல்லை.தற்போது, ரூர்க்கி ஐ.ஐ.டி.,யால் தயாரிக்கப்பட்டுள்ள தரவரிசை பட்டியலில், தரவு முறைகேடோ, மோசடியோ கண்டறியப்படவில்லை.தேர்வு செயல்முறைகள் அனைத்தும் நேர்மையாகவே நடந்துள்ளன. அதனால், புனையப்பட்ட தரவரிசை பட்டியலை யாரும் பரப்பி, மாணவர்களிடம் பதற்றத்தை உருவாக்க வேண்டாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.