திருக்குறளைக் கொண்டாடுங்க... கருத்தரங்கில் வேண்டுகோள்
பல்லடம்: திருக்குறளை அனைவரும் கொண்டாட வேண்டும் என பல்லடம் தமிழ்ச்சங்கம் சார்பில் நடந்த கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.பல்லடம் தமிழ்ச்சங்கம் சார்பில் திருக்குறள் தொடர் கருத்தரங்கம் என்.ஜி.ஆர். ரோட்டில் உள்ள ராம் வணிக வளாகத்தில் நடைபெற்றது. சங்கத் தலைவர் கண்ணையன் தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற முன்னாள் வி.ஏ.ஓ. பாலசுப்பிரமணியம் வரவேற்றார்.தமிழ் ஆசிரியர் கணேசன் பேசியதாவது:திருவள்ளுவர் 'அரிது அரிது' என்கிறார். ஐன்ஸ்டீனின் கண்டுபிடிப்பு மட்டுமல்ல, நம் தமிழகத்தைச் சேர்ந்த வேதாத்திரி மகரிஷி, வள்ளலார் உள்ளிட்டோரின் செயல்பாடுகளும் இதற்குப் பொருந்தும். இவர்களின் செயல்பாடுகளை அறிவின் உச்சம் என்றே சொல்லலாம். மற்ற இலக்கியங்களை விட எளிமையாக மனதில் நிற்பது திருக்குறள் மட்டுமே.அறிவு என்பது அழிக்க முடியாதது. அறிவை நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்தே நாம் மாறுபடுகிறோம். நமது தமிழ் சமூகத்தில் 30-க்கும் மேற்பட்ட பெண்பால் புலவர்கள் இருந்துள்ளனர் என்பது அறிவார்ந்த சமூகத்திற்கு எடுத்துக்காட்டு. அறிவார்ந்த குழந்தைகளைப் பெறுவதே இந்த உலகத்தில் சிறந்த செல்வம் என்கிறார் வள்ளுவர்.திருக்குறளை அனைவரும் கொண்டாட வேண்டும். அதன் கருத்துக்களை ஆழமாகப் பார்த்து, நமது அன்றாட வாழ்க்கையுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.