காலாவதியான உறுப்பினர்களுடன் பி.டி.ஏ., கூட்டம்?
மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் (பி.டி.ஏ.,) பொதுக்குழுக் கூட்டத்தைக் கூட்டுவதற்கான ஏற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. எனினும், கூட்டம் நடத்துவதில் புது சிக்கல் எழுந்துள்ளது. பொதுக்குழுக் கூட்டம் நடந்து எட்டு ஆண்டுகளான நிலையில், பெரும்பாலான உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிந்துவிட்டது. உறுப்பினர்களின் பெயர்ப் பட்டியலை இனிமேல் தூசு தட்டி, அவர்கள் பதவியில் இருக்கிறார்களா? இல்லையா? என்பதைக் கண்டுபிடித்து, அவர்களைத் தேட வேண்டிய நிலை எழுந்துள்ளது. மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் நிதியை வேறு துறைகளுக்கு பயன்படுத்துவது குறித்தும், எட்டு ஆண்டுகளாக இந்த அமைப்பின் பொதுக்குழுக் கூட்டம் நடக்காதது குறித்தும் தினமலர் நாளிதழில் ஆகஸ்ட் 4ம் தேதி செய்தி வெளியானது. இதையடுத்து, பொதுக்குழுக் கூட்டத்தை கூட்டி விவாதிப்பதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விரைந்து ஏற்பாடுகள் செய்யுமாறு, பெற்றோர் ஆசிரியர் கழக அலுவலர்களுக்கு நேற்று உத்தரவிடப்பட்டது. பல ஆண்டுகளுக்குப் பிறகு தங்களுக்கு விடிவுகாலம் பிறக்கப் போகிறது என்ற மகிழ்ச்சி பெற்றோர் ஆசிரியர் கழகத்திற்கு இருந்தாலும், உறுப்பினர்களை எங்கே போய் தேடுவது என்ற கவலை தொற்றிக்கொண்டுள்ளது. மாநிலம் முழுவதிலும் இருந்து 120 பேர், இந்த அமைப்பில் உறுப்பினர்களாக இருக்கின்றனர். எட்டு ஆண்டுகளாக மாநில அமைப்புடன் அதிகமான தொடர்பு இல்லாதவர்களாகவே இருக்கின்றனர். ஓர் உறுப்பினரின் பதவிக் காலம் மூன்று ஆண்டுகள். எனவே, பெரும்பாலான உறுப்பினர்களுக்கு பதவிக்காலம் முடிந்திருக்கும். தங்கள் பிள்ளைகள் குறிப்பிட்ட பள்ளிகளில் படிக்கும் வரை பெற்றோர் ஆசிரியர் கழக அமைப்பில் பதவியை வகிக்கலாம். எட்டு ஆண்டுகளுக்கு முன் உறுப்பினர்களாக இருந்த பல பெற்றோர்களின் பிள்ளைகள் பிளஸ் 2 முடித்து, கல்லூரிக்குச் சென்றிருந்தால் அவர்களின் பதவிக்காலம் முடிந்துவிட்டது என்றே அர்த்தம். இந்த நிலையில் பழைய உறுப்பினர்களின் பெயர்ப் பட்டியலை தற்போது தூசு தட்டி எடுத்துள்ளனர். அவர்களின் முகவரி, தொலைபேசி எண்களில் தொடர்புக்கொண்டு இனிமேல் தான் விசாரிக்க வேண்டும் என துறை அலுவலர்கள் தெரிவித்தனர். மேலும், அரசு தரப்பில் ஐந்து உறுப்பினர்களும், அமைப்பின் தலைவராக இருக்கும் அமைச்சர் தரப்பில் 10 உறுப்பினர்களும் நியமிக்கப்பட வேண்டும். இந்த 15 உறுப்பினர்களும் இதுவரை நியமிக்கப்படவில்லை. இதுபோன்ற நிலையில் பொதுக்குழுக் கூட்டத்தை நடத்துவதற்கான முயற்சிகளில் மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம் இறங்கியுள்ளது. அதிகமான உறுப்பினர்கள் இல்லாதபட்சத்தில், புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்ட பிறகு பொதுக்குழுக் கூட்டப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.