‘பட்டச் சான்றிதழ்களை லேமினேஷன் செய்யவேண்டாம்’
சென்னை: சேதமடையக்கூடிய அபாயம் இருப்பதால், ‘டைவெக்ஸ்’ காகிதத்தால் தயாரிக்கப்பட்ட பட்டச் சான்றிதழ்களை, ‘லேமினேஷன்’ செய்ய வேண்டாம் என அண்ணா பல்கலைக் கழகம், மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக் கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி வெளியிட்டுள்ள அறிவிப்பு: அண்ணா பல்கலைக் கழகத்தின் 31வது பட்டமளிப்பு விழா, கடந்த டிசம்பர் 20ம் தேதி நடந்தது. விழாவில் வழங்கப்பட்ட சான்றிதழ்கள் கிழிக்க முடியாத, ‘டைவெக்ஸ்’ காகிதத்தில் தயாரிக்கப்பட்டவை. இச்சான்றிதழ்களை, ‘லேமினேஷன்’ செய்ய வேண்டிய அவசியம் இல்லை. மேலும், இக்காகிதங்கள் தண்ணீர் உட்புகாத தன்மை கொண்டவை. இக்காகிதங்கள், அதிகளவிலான வெப்பத்தை தாங்கிக் கொள்ளும் திறன் இல்லாதவை. ‘லேமினேஷன்’ செய்யும் போது, இக்காகிதங்கள் சேதமடையக்கூடும் என்பதால் மாணவர்கள், ‘டைமெக்ஸ்’ காகிதத்தால் தயாரிக்கப்பட்ட பட்ட சான்றிதழ்களை, ‘லேமினேஷன்’ செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.