முதன்முறையாக எஸ்.ஜி.ஏ.ஐ. தேர்வெழுதும் மாணவர்கள்
சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், முதன்முறையாக, ஸ்டூடண்ட்ஸ் குளோபல் ஆப்டிடியூட் இன்டெக்ஸ்(எஸ்.ஜி.ஏ.ஐ) எனப்படும் தேர்வை 22-01-2011 அன்று எழுதவிருக்கிறார்கள். பேப்பர் - பென்சில் வைத்து எழுதும் 2.5 மணிநேர தேர்வாகும் இது. ஆனால் இந்த தேர்வு குறித்து மாணவர்கள் எந்த கவலையும் இன்றி இருக்கிறார்கள். தாங்கள் என்ன எழுதப்போகிறோம் என்று தெரியாததால், தங்களுக்கு எந்த நெருக்கடியும் இருக்கவில்லை எனவும் மாணவர்கள் தரப்பில் கூறுகிறார்கள். மேலும் வரும் மே மாதம், 5 பாடங்களுக்கு, சி.பி.எஸ்.இ. நடத்தும் ஆப்ஷனல் புரொபீஷியன்ஷி டெஸ்ட் -ஐ எழுத வேண்டிவரும் என்று மாணவர்களுக்கு சொல்லப்பட்டுள்ளதாக மாணவர் தரப்பு தெரிவிக்கிறது. பாடங்களில் படிப்பதை, நிஜ வாழ்க்கையில் புரிந்து செயல்படும் திறன்களை சோதிப்பதற்காகவே இந்த தேர்வு நடத்தப்படுகிறது. எஸ்.ஜி.ஏ.ஐ. போன்ற தேர்வுகள், புரியாத பருவ நிலையிலிருந்து, ஒரு தெளிவான புரிதலுக்கு வரும் வயதிலிருக்கும் மாணவர்களின் திறன்களை மேம்படுத்தும் முக்கிய பணியை செய்கின்றன என்று சி.பி.எஸ்.இ. வட்டாரங்கள் கூறுகின்றன.