கேள்விகளை புரிந்துகொள்வதில்தான் வெற்றி அடங்கியுள்ளது
* பெரும்பாலான மாணவர்கள் தேர்வெழுதும்போது செய்யும் பெரிய தவறு என்னவென்றால், கேள்விகளை அவசரமாக படித்துவிட்டு தவறான விடைகளை எழுதி விடுவதுதான். குறுகிய நேரமே கொண்ட தேர்வில் விடைகளை விரைவாக எழுத ஆரம்பிக்க மாணவர்கள் அவசரப்படுவது இயற்கைதான். ஆனால் ஒரு கேள்வியை சரியாக படிக்காமல் தவறான விடைகளை எழுதிவிடுவதால், ஏற்படும் அனாவசியமான நஷ்டத்தையும் எண்ணிப்பார்க்க வேண்டும். * மாணவர்கள் ஒரு கேள்வியை படிக்கும்போது அதிலுள்ள கருத்துக்கள் அவர்களுக்கு அறிமுகமானதாகவே இருக்கும். எனவே அவசரக் கோலத்தில் அந்த குறிப்பிட்ட வார்த்தைகளைப் பார்த்தவுடன், இவர்களாகவே ஒரு பதிலை எழுத ஆரம்பித்து விடுவார்கள். உண்மையில் அந்த கேள்வியில் என்ன கேட்கப்பட்டுள்ளது என்பதை விட்டுவிடுவார்கள். (உதாரணமாக, பெரியார் சுயமரியாதை இயக்கத்தை ஏன் தொடங்கினார்? என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டிருந்தால், அந்த கேள்வியை அவசர அவசரமாக படிக்கும் ஒரு மாணவர், பெரியாரின் சுயமரியாதை இயக்கப் பணிகள் என்ன? என்ற ரீதியில் புரிந்துகொண்டு பதிலெழுதி விடுவார். பிரச்சினையே இங்கேதான் உள்ளது) இதனால் மிகவும் அனாவசியமான மதிப்பெண் இழப்புகளை சந்திக்க வேண்டியுள்ளது. * கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு சரியான முறையில் பதிலளிக்க வில்லையெனில், கேள்வித் தாள்களை திருத்துபவர்களுக்கு குழப்பமும், எரிச்சலும் உண்டாகும். இதனால் நீங்கள் சரியாக பதிலளித்த விஷயங்களின் மீதும் திருத்துபவருக்கு ஒருவித வெறுப்பு உண்டாகும். எனவே கேள்விகளைப் படிக்கையில் முழுகவனத்தையும் செலுத்திப் படித்து, தேவைப்பட்டால் சில தடவைகள் திரும்ப திரும்ப படித்து கேட்கப்பட்ட கேள்வியை சரியாக புரிந்து கொள்ளவும். மேலும் கேள்வியை படிக்கும்போது முதல் வார்த்தையிலிருந்து, கடைசி வார்த்தை வரை கவனமாக படிக்கவும். * இவ்வாறு கவனமாக படித்து சரியாக புரிந்து கொள்ளப்பட்ட கேள்விக்கு, கேட்கப்பட்ட அளவில் எவ்வாறு சுருக்கமாகவும், தெளிவாகவும் பதிலளிக்க வேண்டும் என்பதை திட்டமிட்டு எழுத ஆரம்பிக்க வேண்டும். பதில்களை வளவள என்று எழுதாமல், என்ன கேட்டிருக்கிறார்களோ, அதற்கேற்ப சுருக்கமாகவும், நுட்பமாகவும் எழுத வேண்டும். இதனால் உங்களின் நேரம் பெரியளவில் மிச்சமாகும். திருத்துபவருக்கும் சுலபமாக இருக்கும். * மேலும் கேள்வித்தாளில் கேள்விகள் மதிப்பெண்கள் அடிப்படையில் பகுதி பகுதியாக பிரித்துக் கொடுக்கப்பட்டிருக்கும். சில பகுதி கேள்விகள் அனைத்தையும் எழுத வேண்டியிருக்கும், சில பகுதி கேள்விகள் விருப்ப அடிப்படையில்(சாய்ஸ் வகை) தேர்ந்தெடுத்து எழுதுவதாக இருக்கும். எனவே கேள்விகளுக்கான குறிப்புகளை முதலில் கவனமாக படிப்பது முக்கியம். இதனால் தேவையற்ற கேள்விகளுக்கு பதில் எழுதுவதை தவிர்ப்பதுடன், நேரத்தை பெரியளவில் மிச்சப்படுத்தலாம். மேலே சொன்ன விஷயங்கள் சாதாரணமானவையாக தெரியலாம். ஆனால் உண்மை என்னவெனில், தேர்வெழுதும்போது கேள்விகள் விஷயத்தில் நிறைய மாணவர்கள் தவறுசெய்து மதிப்பெண்களை கோட்டை விடுகிறார்கள். சாதாரண விஷயம் என்று நாம் நினைப்பதில்தான் சமயத்தில் அதிகம் தவறுசெய்து விடுகிறோம். எனவே கேள்வித்தாளை மிக கவனமாகப் படித்து, என்ன கேட்டுள்ளார்கள் என்பதை தெளிவாக புரிந்துகொள்வது தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கான ஒரு தாரக மந்திரம்.