மருத்துவ பல்கலை ஆராய்ச்சிக்கு ரூ.1 கோடி
சென்னை: மருத்துவ பல்கலை ஆராய்ச்சி உதவித்தொகை ரூ.10 லட்சத்திலிருந்து 1 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.மருத்துவ பல்கலையின் கீழ், 757 உறுப்பு கல்லுாரிகள் உள்ளன. கடந்த ஆண்டு மருத்துவ ஆராய்ச்சி தினத்தில், மருத்துவ வல்லுனர்கள் பங்கேற்ற மூன்று நாள் சர்வதேச மருத்துவ மாநாடு நடந்தது. அதில், பல மருத்துவ வல்லுனர்கள், ஆராய்ச்சிக் கட்டுரைகள் சமர்ப்பித்தனர். மேலும், தொற்றும் நோய், தொற்றா நோய்களுக்கான தீர்வுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டன.அதேபோல இன்றும், சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு மருத்துவ பல்கலையில் நடந்த ஆராய்ச்சி நாள் விழாவில், மாணவர்கள், மருத்துவர்கள், மருத்துவ வல்லுனர்கள், 1,500 ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளனர். மருத்துவத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் விதமாக, படைப்புகளை வழங்கியுள்ளனர்.இந்த பல்கலை சார்பில் ஆராய்ச்சிக்காக ஆண்டுக்கு, 10 லட்சம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட்டு வந்தது. இந்த ஆண்டு முதல், அந்த உதவித் தொகை 1 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.